கொரோனா வந்தால் மிகவும் ஆபத்து வடகொரியாவுக்குள் நுழைய விடாதீங்க... மார்தட்டிய அதிபர் கிம் முதல் முறையாக அலறல்

சியோல்: `கொரோனா வைரசை வடகொரியாவுக்குள் நுழைய விட்டு விடாதீர்கள்,’ என்று அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி, மனித உயிர் இழப்பிலும், பொருளாதார இழப்பிலும் கடுமையாக பாதித்து வருகிறது. ஆனால், வடகொரியா மட்டுமே இதுவரை தனது நாட்டில் ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை என்று மார்த்தட்டி வருகிறது. தனது  நாட்டில் கொரோனா பாதித்த ஒரு அதிகாரியை அதிபர் கிம் ஜோங் உன் சுட்டுத் தள்ளி விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு கூட தகவல் வெளியானது. அதன் பிறகு, அவரே மாரடைப்பு நோய் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டதாக தகவல் பரவியது. பிறகு, அவர் உயிருடன் இருப்பதாக கூறப்பட்டாலும்,  அதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியாகிவில்லை.

இந்நிலையில், கொரோனா வைரஸ் நமது நாட்டுக்குள் நுழைய விட்டு விடாதீர்கள் என்று வடகொரியாஅதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. ‘இந்த வைரஸ் பரவுவதை தடுக்க தவறினால், கற்பனை செய்ய முடியாத மற்றும் மீளமுடியாத நெருக்கடியில் சிக்க நேரிடும்,’ என்று முதல் முறையாக அவர் எச்சரித்துள்ளார். வட கொரியாவில் நடந்த தனது ஆளும் கட்சி கூட்டத்தில் மேலும் பேசிய கிம், ``கொடிய கொரோனா வைரஸ் வடகொரியாவுக்குள் நுழைவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை நாம் அவசரப்பட்டு நிறுத்தினால், அதனால் உண்டாகும் பாதிப்பு கற்பனை செய்ய முடியாத, மீள முடியாத‍தாக இருக்கும்,’’ என்றார். ஆனால், வட கொரியாவில் போதிய மருத்துவ வசதிகளோ, உள்கட்டமைப்போ இல்லாத நிலையில், இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என்று வடகொரியா கூறுவது உண்மையாக இருக்க முடியுமா? என மருத்துவ நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Stories: