கொழும்பு கிழக்கு துறைமுக முனையம் மேம்பாட்டு திட்டம் இலங்கையில் இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனா

கொழும்பு: இலங்கையில் இந்தியாவும், ஜப்பானும் சேர்ந்து புதிய கன்டெய்னர் முனையத்தை அமைக்கும் திட்டத்தை சீர்குலைக்க சீனா முயற்சிக்கிறது. சீனாவின் முனையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத துறைமுக ஊழியர்கள், இந்தியாவின் திட்டத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதன் பின்னணியில், சீனா இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. ஏழை நாடுகளுக்கான இவற்றுக்கு, பண ஆசை காட்டி இந்த அதை செய்கிறது. இலங்கை, பாகிஸ்தான் போன்றவற்றை தனது பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் அது வசப்படுத்தி இருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ், இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தை சீனா அபகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு பல ஆயிரம் கோடியை கடனாக வழங்கியுள்ள அது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பொருளுாதார பாதையை அமைத்து வருகிறது. சமீபத்தில், நேபாளத்தையும், வங்கதேசத்தையும் கூட அது வளைத்து விட்டது. இதைத் தொடர்ந்தே, லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை பிரச்னையை தொடங்கி, இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்த பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

சீனாவின் தூண்டுதல் காரணமாக, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தனது அத்துமீறிய தாக்குதலை அதிகரித்து இருக்கிறது. இந்தியாவுக்கு சிறந்த நட்பு நாடாக இருந்த நேபாளமும், எல்லையில் பிரச்னையை கிளப்பி, ராணுவத்தை நிறுத்தும் அளவுக்கு சென்று விட்டது. வங்கதேசமும் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறது. ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு சீனாவால் கொடுக்கப்படும் இந்த பிரச்னைகளின் பின்னணியில், ஏதோ பெரிய சதித்திட்டம் இருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றன.

இந்நிலையில், இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா, ஜப்பான் நாடுகளுடன் இலங்கை போட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. கப்பலில் கொண்டு வரப்படும் கன்டெய்னர்களை கையாளக் கூடிய இந்த கிழக்கு முனையம், இலங்கையின் மிகவும் ஆழமான துறைமுகமாகும். மிகப்பெரிய கப்பல்களை கூட இங்கு எளிதாக நங்கூரமிட்டு நிறுத்த முடியும். இந்த முனையத்தை மேம்படுத்துவதற்கான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த சிறிசேனா ஆட்சியின்போது செய்யப்பட்டது.

இந்த முனையம், சீனாவால் நடத்தப்பட்டு வரும் கொழும்பு சர்வதேச கன்டெய்னர் முனையத்துக்கு அருகே அமைந்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு முடிந்து விட்டது. கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்கான முறையான ஒப்பந்தம், மூன்று நாடுகள் இடையிலும் இன்னும் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில், சீனாவின் முனையத்துக்கு ஆதரவு அளிக்கும் இங்குள்ள துறைமுக சங்கமும், ஊழியர்களும் இந்தியா உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, இந்த முனையத்துக்கான அபிவிருத்தி பணிகள் அனைத்தையும் இலங்கை அரசே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தின. மேலும், மிகப்பெரிய ஆழ்கடல் முனையத்தை இலங்கை உருவாக்குவதை தடுப்பதற்கு இந்தியா முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றன.  

இலங்கை அரசே அனைத்து பணிகளையும்  மேற்கொள்ள வேண்டும் என்றும் பணிகளை வேறு நாடுகளிடம் கொடுக்க கூடாது  என்பதை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளதாகவும் துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் அறிவித்தன. அவர்களுடன் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று காலை தனது இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக துறைமுக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கையில் இந்தியா எந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவே, இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இதில், பிரதமர் ராஜபக்சேவும் அவருடைய தம்பியான அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

* சீனா அனுப்பிய ராட்சத கிரேன்கள்

கடந்த வாரம் இலங்கை துறைமுக ஆணையத்தால் நிர்வகித்து வரப்படும் ஜெயா துறை முனையத்துக்காக சீனாவில் இருந்து 3 மிகப்பெரிய கிரேன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், இந்த கிரேன்களை கிழக்கு முனையத்தில் நிறுவ வேண்டும் என்று கூறி துறைமுக ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தியா - ஜப்பான் - இலங்கை உடனானவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தடுக்கவே, அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்தனர். இதையடுத்து, இந்த ராட்சத கிரேன்களை கிழக்கு துறை முனையத்தில் நிறுவும்படி பிரதமர் ராஜபக்சே உத்தரவிட்டார். கடந்த புதன்கிழமை ராஜபக்சே அளித்த பேட்டியில், ‘துறை மேம்பட்டு பணி தொடர்பாக கடந்த ஆட்சியின்போது அதிபர் சிறிசேனா - இந்திய பிரதமர் மோடி  இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, துறைமுக மேம்பாட்டு பணிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை,” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* சீனா, பாகிஸ்தானில் இருந்து மின் சாதனம் வாங்க கூடாது

மத்திய மின்சக்தி துறை அமைச்சர் ஆர்கே சிங் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ‘‘சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து மின்சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பாக ஆய்வின் அடிப்படையில் அனுமதிக்கப்படாது. உபகரணங்கள் இறக்குமதி செய்வதற்கு சீன நிறுவனங்களுக்கான ஆர்டர்களை மாநிலங்கள் வழங்க கூடாது. நாம் அனைத்தையும் இங்கேயே உற்பத்தி செய்கிறோம். இந்தியா சீனாவிடம் இருந்து மொத்தம் 71 ஆயிரம் கோடிக்கு மின்சாதன உபகரணங்களை இறக்குமதி செய்கிறது. அது நமது எல்லைக்குள் அத்துமீறும்போது, அதனிடம் நாம் இப்பொருட்களை வாங்கக் கூடாது. மின்சாதன பொருட்களை சீனா, பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்ய கூடாது. இறக்குமதி செய்யவும் அனுமதிக்க மாட்டோம்,’’ என்றார்.

Related Stories: