சீனாவின் பக்கம் சாய்ந்த நேபாள பிரதமரின் பதவி தப்பிக்குமா? ஆளும் கட்சி இன்று முடிவு

காத்மண்டு: நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலக எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பிரதமராக அவர் நீடிப்பாரா? என்ற தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஆளும் கட்சியின் நிலைக்குழு கூட்டம் இன்று கூடுகிறது. அண்டை நாடான நேபாளம் சமீப காலமாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதுடன், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்தியாவின் கலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளை தனக்கு சொந்தமானது என உரிமை கோரி, நாடாளுமன்றத்திலும் அதன் வரைப்படத்தை தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கு பின்னணியில் சீனா இருந்து வருகிறது. நீண்ட காலமாக இந்தியாவுடன் நேபாளம் நட்புறவு கொண்டிருந்த நிலையில், சீனாவின் பக்கம் நேபாள பிரதமர் சர்மா ஒலி சாய்ந்தது, அங்குள்ள தலைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எல்லை பிரச்னையை கிளப்பியதால், தன்னை பதவியில் இருந்து நீக்க இந்தியா முயற்சிப்பதாகவும் சில தினங்களுக்கு முன் சர்மா ஒலி குற்றம் சாட்டினார். அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நேபாளத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டத்தில், பிரதமர் சர்மா ஒலியின் தலைமையிலான அரசு அடிப்படை கடமைகளை அளிக்க தவறி விட்டதாகவும், கவனத்தைத் திசை திருப்ப இந்தியா மீது குற்றம் சாட்டுவதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘தன்னை பதவியில் இருந்து நீக்க இந்தியா சதித்திட்டம் தீட்டுவதாக அவர் கூறிய குற்றச்சாட்டும், அரசியல் ரீதியாக சரியானது அல்ல; ராஜதந்திர ரீதியிலும் பொருத்தமானது அல்ல. பிரதமரின் இதுபோன்ற அறிக்கை,  அண்டை நாடுகளுடான உறவில் விரிசலை ஏற்படுத்தும்,’ என்று முன்னாள் பிரதமரான புஷ்பா கமல் தகால் பிரசந்தா கண்டித்தார். அவரைப் போலவே, கட்சியின் மற்ற மூத்த தலைவர்களும் இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டை சர்மா ஒலி நிரூபிக்க வேண்டும் அல்லது அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். இதனால், ஒலியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரது தலையெழுத்தை நிர்ணயிக்க போகும் கட்சியின் நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், சர்மா ஒலியின் பதவி நீடிக்குமா? அல்லது நீக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.

Related Stories: