விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் மாவட்ட அதிமுக  பொறுப்பாளராக பொறுப்பு வழங்கி இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். பல்வேறு பரபரப்பான கருத்துக்களை செய்தியாளர்கள் சந்திப்பிலும், மேடைகளிலும் பேசி அடிக்கடி சர்ச்சைகளுக்கு ஆளானார் ராஜேந்திர பாலாஜி. குறிப்பாக, இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர் கூறிய கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இது அதிமுக கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் முதல்வரிடம் புகார் அளித்தனர். முதல்வரும் அவரை அழைத்து கண்டித்தார்.

அதேபோல் சசிகலா விரைவில் விடுதலையாக இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் கூறி வந்தார். இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அவரை நேரில் அழைத்து கண்டித்தனர். இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி வகித்து வந்த விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியை பறித்து கடந்த மார்ச் 22ம் தேதி முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிரடியாக அறிவித்தனர். கட்சி தலைமையின் இந்த நடவடிக்கையால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் இருந்தார். அதேநேரம் கடந்த சில வாரங்களாக அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. கட்சி தலைமைக்கு ஆதரவாகவும், கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராகவும் பேசி வந்தார். இதன்மூலம் கட்சி தலைமையிடம் நல்ல பெயரை ஏற்படுத்திக் கொண்டார். இதையடுத்து தற்போது அவர் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட அதிமுக பணிகளை கவனிப்பதற்கு பொறுப்பாளராக கே.டி.ராஜேந்திர பாலாஜி (பால்வளத்துறை அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர். சில வாரங்களாக அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. கட்சி தலைமைக்கு ஆதரவாகவும், கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராகவும் பேசி வந்தார். இதன்மூலம் கட்சி தலைமையிடம் நல்ல பெயரை ஏற்படுத்திக் கொண்டார்.

Related Stories: