×

சென்னையில் கொரோனாவை தடுக்க முடியாமல் தடுமாறி நிற்பது போன்ற நிலை தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உருவானால் மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தி விடும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: சென்னையில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் பல்வேறு குழுக்களைப் போட்டு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்குள் பனிப்போர் ஏற்படுத்தி தடுமாறி நிற்பது போன்ற நிலை, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உருவானால் மக்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் 4,343 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள்- அதாவது 2322 பேர், சென்னை தவிர பிற மாவட்டங்களில் இந்த நோய்க்குள்ளாகியிருக்கிறார்கள் என்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையுமளிக்கிறது. 57 பேர் இறந்ததில், 35 பேர் வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் என்ற அரசின் புள்ளிவிவரம் தமிழ்நாட்டில் “சமூகப் பரவல்” இல்லை என்று அமைச்சரும், முதலமைச்சருமே, மருத்துவ விஞ்ஞானிகள் போல் மாறி மாறி பேட்டியளித்து- ‘’நோய்த் தடுப்பு முயற்சிக்கான’’ காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

சென்னை தவிரப் பிற தமிழக மாவட்டங்களில் ஜூன் 1-ம் தேதியன்று கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7725 பேர். ஆனால் ஜூலை 2-ம் தேதி இந்த எண்ணிக்கை, 35 ஆயிரத்து 794 ஆக அதிகரித்து விட்டது. அப்போது வெளிமாவட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 46 ஆக இருந்தது, இன்றைக்கு 357 ஆக உயர்ந்து- 7 மடங்கைத் தாண்டி விட்டது. கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2688 ஆக இருந்தது- இன்றைக்கு 28 ஆயிரத்து 361 ஆகி- ஏறக்குறைய 10 மடங்கைத் தாண்டி விட்டது. நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா ‘’அபாய அலை’’  கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டது என்பதைத்தான் அதிமுக அரசின் செய்திக் குறிப்பு தெளிவுபடுத்துகிறது.

கிராமங்களில் இப்படியொரு அபாயகரமான சூழல் உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே திமுக சார்பில், மாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, நோய்க்கு உள்ளானோரின் மருத்துவமனைவாரியான எண்ணிக்கை, கொரோனா நோய்ப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, இறந்தோரின் எண்ணிக்கை, பெரும் பாதிப்பிற்குள்ளான நகரங்களில் இருந்து மாவட்டங்களுக்குச் சென்றோரின் எண்ணிக்கை, மருத்துவமனை வாரியாக கொரோனா நோய்த் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கேட்டார்கள்.

அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆகவே, மீண்டும் மாவட்டச் செயலாளர்களை கொரோனா நோய் குறித்து ‘’32 தகவல்கள்’’ கோரி மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனுக்களைக் கொடுக்குமாறு அறிவுறுத்தினேன். இந்நிலையில் மற்ற மாவட்டங்களில்- குறிப்பாக, மருத்துவக் கட்டமைப்பு பெருமளவில் இல்லாத கிராமங்களில்  கொரோனாவை எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் உடனடியாக அ.தி.மு.க. அரசு ஏற்படுத்திட வேண்டும். கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, கொரோனா நோய்க்கு உள்ளானோருக்குச் சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகளை அதிகரிப்பது, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நோய் குறித்துத் தொடர் விசாரணை மேற்கொண்டு முறைப்படியான மருத்துவ உதவிகளைச் செய்வது, வெண்டிலேட்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, அறிகுறி அல்லது அறிகுறி இல்லாத நோய்த் தொற்றாளர்களை கண்டுபிடிக்கத் தீவிர பரிசோதனையை முடுக்கி விடுவது, கொரோனா முன்கள வீரர்களுக்குத் தேவையான சுய மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற அவசரகாலப் பணிகளில் இனியும் காலதாமதம் செய்யாமல் அ.தி.மு.க. அரசு ஈடுபட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் கட்டுக்கடங்காமல் போகும் கொ ரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் பல்வேறு குழுக்களைப் போட்டு, அதிகாரிகளுக்குள்ளும் அமைச்சர்களுக்குள்ளும் பனிப்போர் ஏற்படுத்தி’’ தடுமாறி நிற்பது போன்ற நிலை, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உருவானால் மக்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்திவிடும் விடும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். நோய்த் தொற்றுப் பரவல் அதுவாகவே தணியட்டும், அப்போது நம்மால் தான் தடுக்கப்பட்டுத் தணிந்தது, குறைந்தது என்று புகுந்து பெயர் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்து, உடனடியாகத் திட்டமிட்டு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தால், ஆபத்தான கட்டத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது என்பதை உணர வேண்டும். இதை நான் விடுக்கும் எச்சரிக்கையாகக் கொண்டு, மக்களைக் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுப் பரவல் அதுவாகவே தணியட்டும் என நினைத்து எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தால், ஆபத்தான கட்டத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது.

Tags : Chennai ,districts ,disaster ,Tamil Nadu ,CENSUS ,MK Stalin , Madras, Corona, Unstoppable, Tamil Nadu, Other District, People
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை