×

ஓமியோபதி மருத்துவர்கள் உட்பட அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்: இயக்குநருக்கு டாக்டர் ஞானசம்பந்தம் கடிதம்

சென்னை: தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து ஓமியோபதி மருத்துவர்கள் உட்பட அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்று இந்திய மருத்துவத்துறை மற்றும் ஓமியோபதி துறை இயக்குனருக்கு  தமிழக அரசின் ஓமியோபதி  மெடிக்கல் கவுன்சில் தலைவர்  டாக்டர் ஞானசம்பந்தம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கடந்த 2015ம் ஆண்டு 475 ஆயுஷ் மருத்துவப் பிரிவுகள் துவங்க ஆணை பிறப்பித்து இருந்த நிலையில் வழக்குகள் காரணமாக செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி மருத்துவப் பிரிவுகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ பிரிவில் பணிபுரிந்து வந்த மருத்துவர்கள் பலர் ஓய்வு பெற்று விட்டனர்.

இதனால் அந்த இடங்கள் அனைத்திலும் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் இல்லாமல் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க தற்காலிகமாக பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்று இந்திய மருத்துவத்துறை மற்றும் ஓமியோபதி மருத்துவ இயக்குனருக்கு அனுமதி வழங்கி கடிதம் எழுதியுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆர்சனிகம் ஆல்பம் 30சி ஓமியோபதி மருந்து மிகுந்த பலனை கொடுத்து வருகிறது.
கொரோனா நோய்த் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளும் குணமாகி வருகின்றனர்.

தமிழகத்தில் 8 கோடி மக்களும் பயன்பெறும் வகையில் ஆர்சனிகம் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மருந்தை வழங்க மதுரை திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி முதல்வர் 11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க குறைந்தது 6 லட்சம் தேவைப்படும் என்று கூறியுள்ளார். கொரோனா நோய்த்தொற்றுக்கு வேக்சின் கண்டுபிடிக்காத நிலையில் ஆர்சனிகம் ஆல்பம் 30சி மாற்று மருந்தாக பயன்பட்டு வருகிறது. எனவே காலிப்பணியிடங்களில் ஓமியோபதி மருத்துவர்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ஓமியோபதி மருத்துவ பிரிவை துவக்கி கொரோனா தொற்றை முழுமையாக தமிழகத்திலிருந்து ஒழிக்க ஓமியோபதி மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : doctors ,Ophthalmologists , Ophthalmology Doctors, All Vacancies, Fill Up, Director, Doctor
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை