×

கெட்டுப்போன உணவு வழங்கியதால் கொரோனா நோயாளிகள் போராட்டம்: கொருக்குப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருவதால் வடசென்னை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தண்டையார்பேட்டையில் சுமார் 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வுகாண முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால் கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரி, அரசு கல்லூரி மற்றும் சமுதாய கூடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் கொருக்குப்பேட்டை இளையமுதலி தெருவில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட 300 பேரும் கல்லூரி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்த கொருக்குப்பேட்டை போலீசாருடன் மாநகராட்சியின் 4வது மண்டல அதிகாரி, சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் சுமார் 3 மணி நேரம் நடந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு சிறப்பாக செயல்படுவதாக கூறுகிறது. ஆனால் எங்களுக்கு சரியான முறையில் உணவு வழங்குவதில்லை. வேகாத இட்லி, உப்புமா தருகின்றனர். கபசுர குடிநீர் தருவதில்லை. கெட்டுப்போன உணவுகளை வழங்குகின்றனர். கொரோனா நோயாளிகளை மருத்துவர்கள் தினமும் வந்து பார்ப்பதில்லை. 300 பேருக்கு 2 கழிவறைகள்தான் இருப்பதால் சிரமப்பட்டு வருகிறோம். இதற்கு மாநகராட்சி அதிகாரிகளும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.


Tags : Corona , Spoiled food, corona patients, struggle, gorgonpet
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...