×

கொரோன ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள்: கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வகம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கொரோனா ஊரடங்கு நேரத்தில், அரசின் விதிகளை மீறி கல்குவாரி செயல்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உத்திரமேரூர் அடுத்த ஆலஞ்சேரி கிராம மலையை ஒட்டி தனியார் கல்குவாரி செயல்படுகிறது. இந்த கல்குவாரி அமைந்துள்ள மலை பகுதியில் இருந்து வரும் மழை நீர், ஆலஞ்சேரி உட்பட சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம நீர்நிலைகளின் நீராதாரமாக விளங்குகிறது. இங்குள்ள கல்குவாரியில் பல அடி ஆழத்தில் பள்ளங்கள் தோண்டி, கற்கள் எடுக்கப்படுகிறது. இதனால் இயற்கை வளங்கள் பாதிப்பதோடு, கனிம வளங்களும் கொள்ளையடிப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும், நீராதாரம் இல்லாமல், நீரின்றி விவசாய நிலங்கள் வறண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக, இங்குள்ள கல்குவாரி இயங்காமல் இருந்தது. ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த வித அனுமதியும் வழங்காத போதிலும், கல்குவாரி செயல்படுவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். ஊரடங்கின் காரணமாக கிராம மக்கள், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் வேளையில், கல்குவாரியில் இருந்து வெளியே வரும் கனரக வாகனங்கள், கிராமங்கள் வழியே அதிவேகமாக செல்கின்றன.

இதில், வீடுகளில் அதிர்வு ஏற்படுவதுடன், சாலைகளும் மோசமான நிலைக்கு மாறுகின்றன. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், மாவட்ட நிர்வகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கிராம மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு இந்த கல்குவாரியை மூட வேண்டும். விதிகளை மீறி செயல்படும் குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : Calvarians ,curfew ,Corona , Corona curfew, violation of rules, calculus, district management
× RELATED மும்பையில் ஊரடங்கு விதிகளில் புதிய...