×

மழை துவங்கியதால் கொசுக்கள் படையெடுப்பு: கொரோனாவை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் அபாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. கொரோனாவை தொடர்ந்து, படையெடுத்து வரும் கொசுக்கள் மூலம் டெங்கு, வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க தேவையான நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் தற்போதே எடுக்க வேண்டும். உள்ளாட்சிகளில் பொதுசுகாதாரம் பாதுகாக்கப்படுவது நாளுக்கு நாள் சவாலாக மாறி வருகிறது. பொது சுகாதார பணிகளை மேற்கொள்ள போதுமான அளவில் பணியாளர்கள் இல்லை என்பது ஒருபுறம், மறுபுறம் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மையால் வீட்டில் சேரும் குப்பை தெரு, வாய்க்கால்களில் வீசி எறிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற செயல்களால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரப்பும் காரணிகளான ஈ, கொசு போன்றவை எந்நேரமும் தொல்லைகளாக உருவாகி உள்ளன. நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதார பணியாளர்கள் இல்லை. நகர் பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்குள் கழிவுநீர் அகற்றம் பணி நடக்கிறது. ஊராட்சிகளில் மூன்று மாதம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கழிவு நீர் அகற்றும் பணி நடக்கிறது. ஊராட்சியில் குறைந்த சம்பளத்திற்கு துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு வருவது இல்லை. இதனால் சுகாதாரம் மேலும் கடுமையாக பாதிக்கிறது.

திருவள்ளூர் நகரில் பெரியகுப்பம் பஸ் நிலையம் உட்பட பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதில் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உள்ளது. பகல் முழுவதும் ஈ தொல்லையால் அவதிப்படும் அப்பகுதி பொதுமக்கள், சூரியன் மறைந்தால் கொசு தொல்லைக்கு ஆட்பட நேரிடுகிறது. மாலை 6 மணிக்கே வீட்டின் கதவு, ஜன்னல்களை அடைத்து கொண்டு, கொசு ஒழிப்பிற்கான சுருள், திரவ மருந்து, எலக்ட்ரிக் பேட் கையுமாக பொதுமக்கள் திரிய வேண்டியுள்ளது.
இதையும் மீறி கொசுக்கடியால் டெங்கு, சிக்குன்-குனியா, வைரஸ் என பலவித காய்ச்சலில் மக்கள் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவ மழை காலமும் துவங்கியதால் மழை விட்டு, விட்டு பெய்கிறது.

தட்ப வெட்ப சூழ்நிலையும் மாறி வருகிறது. இந்த பருவநிலை மாற்றம் கொசு உற்பத்திக்கு துணைபுரிகிறது. சிறு பள்ளங்களில் தேங்கிய கழிவுநீரில் கூட கொசு உற்பத்தி உள்ளது. இதனால் நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். குழந்தைகள் அதிளவில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த மாவட்டத்தில்தான் டெங்கு தலைவிரித்தாடி, கடந்த இரு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. இந்த கொடுமை இனிவரும் காலங்களில் வராமல் இருக்க உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் சுகாதாரத்தை பேணி காக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tags : Mosquito invasion ,corona Mosquito invasion , Rainfall, mosquito invasion, corona, dengue fever, danger
× RELATED பருவநிலை மாற்றத்தால் கொசுக்கள்...