×

ஒரே நாளில் 4,329 பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது: சென்னையில் மட்டும் 64 ஆயிரம் பேர்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆகியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 64 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது நாளாக நேற்றும் சென்னையை விட மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கை மீறி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக மத்திய அரசு நடைமுறைப்படுத்திய நான்கு கட்ட ஊரடங்கு காலத்தில் சென்னை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகத்தான் இருந்தது. இந்நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. அனைத்து நிறுவனங்களும் செயல்படத் தொடங்கின. இதன் காரணமாக தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மதுரை, வேலூர், தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்தை வரும் ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் மண்டல வாரியாக பிரிக்கப்பட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு மாவட்ட வாரியான நடைமுறை பின்பற்றப்பட்டது.

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,329 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. சென்னையில் மட்டும் நேற்று 2,082 பேருக்கும், மொத்தம் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 34,242 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4,329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் வசித்தவர்கள் 4,264 பேர். வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 65 பேர் உட்பட மொத்தம் 4,329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,082 பேர், செங்கல்பட்டில் 330 பேர், மதுரையில் 287 பேர், திருவள்ளூரில் 172 பேர், திருவண்ணாமலையில் 151 பேர், வேலூரில் 145 பேர், தேனியில் 126 பேர், காஞ்சிபுரத்தில் 121 பேர், சேலத்தில் 99 பேர், ராணிப்பேட்டையில் 90 பேர், கள்ளக்குறிச்சியில் 85 பேர், ராமநாதபுரத்தில் 73 பேர், விருதுநகரில் 65 பேர், சிவகங்கையில் 53 பேர், கன்னயா குமரியில் 54 ேபர், திருச்சியில் 47 பேர், நெல்லையில் 41 பேர், கோவையில் 37 பேர், விழுப்புரத்தில் 33 பேர், திருப்பத்தூரில் 33 பேர், தூத்துக்குடியில் 27 பேர், கடலூரில் 20 பேர், புதுக்கோட்டையில் 18 பேர், திருவாரூரில் 17 பேர், நாகப்பட்டிணம் 17 பேர், திண்டுக்கலில் 17 பேர், ஈரோட்டில் 14 பேர், கிருஷ்ணகிரியில் 14 பேர், தர்மபுரியில் 14 பேர், தஞ்சையில் 13 பேர், திருப்பூரில் 5 பேர், தென்காசியில் 4 பேர், கரூரில் 4 பேர், நாமக்கல் 4 பேர், நீலகிரியில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2,621 பேர் ஆண்கள். 1,708 பேர் பெண்கள். தற்போது வரை 63,016 ஆண்கள், 39,638 பேர் பெண்கள், 22 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 2,357 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 58,378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 42,935 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 42 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 33 பேர். இதைத்தவிர்த்து செங்கல்பட்டைச் சேர்ந்த 9 பேர், மதுரையைச் சேர்ந்த 8 பேர்,  திருவள்ளூரைச் சேர்ந்த 4 பேர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர், விழுப்புரத்தைச் சேர்ந்த 2 பேர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர், தேனியைச் சேர்ந்த  ஒருவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவர், ஈரோடுட்டைச் சேர்ந்த ஒருவர், திண்டுக்கலைச் சேர்ந்த ஒருவர், சேலத்தைச் சேர்ந்த ஒருவர் என்று மொத்தம் 64 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இவர்களில் 6 பேர் எந்தவித இணை நோய்கள் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டு மட்டும் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1358 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னையை விட மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் 2027 பேரும், மாவட்டங்களில் 2316 பேரும் பாதிக்கப்பட்டனர். நேற்று சென்னையில் 2082 பேரும், மாவட்டங்களில் 2247 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை விட மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai , 4,329 people infected in one day, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...