×

எல்லையில் அத்துமீற நினைப்பவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்: லடாக்கில் ஆய்வு செய்த பிரதமர் மோடி சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

புதுடெல்லி: எல்லையில் சீனாவுடன் போர் பதற்றம் நிலவும் நிலையில்,  லடாக் எல்லைக்கு பிரதமர் மோடி நேற்று திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு பாதுகாப்பு நிலவரங்களை ஆய்வு செய்த அவர், ‘எல்லையில் அத்துமீற நினைப்பவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்,’ என சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை நிகழ்ந்ததாக மத்திய அரசு கூறி உள்ளது. இதன் காரணமாக லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர். ஆனாலும் கூட இந்தியா-சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. வர்த்தகம், தூதரக ரீதியாகவும் சீனாவுக்கு பல்வேறு அழுத்தங்களை தர இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, கல்வான் மோதலைத் தொடர்ந்து சீன ராணுவம்  இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பகுதியில் ஆய்வு செய்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் லடாக் செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பிரதமர் மோடி நேற்று காலை 9.30 மணிக்கு லடாக்கின் லே பகுதிக்கு வந்தடைந்தார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நாரவனே ஆகியோர் உடன் இருந்தனர். அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள  நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். பின்னர், கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் கடினமான மலைப்பிரதேசமான நிம்மு ராணுவ முகாமுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு ராணுவ, விமான படை மற்றும் இந்தோ-திபெத் எல்லைபாதுகாப்பு போலீசாருடன் பேசினார்.

பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: நம் எதிரிகள் உங்கள் கோபத்தையும், ஆற்றலையும் இன்று பார்த்திருக்கிறார்கள். எல்லை விரிவாக்கம் செல்லும் காலம் மலையேறி விட்டது. இது வளர்ச்சிக்கான யுகம். விரிவாக்க சக்திகள் தோற்கடிக்கப்படும் அல்லது விரட்டி அடிக்கப்படும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. அமைதி, நட்பு மற்றும் தைரியம் ஆகிய நற்பண்புகளை பழங்காலத்திலிருந்தே இந்தியா கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. அமைதி மற்றும் முன்னேற்றத்தின் சூழலை தொந்தரவு செய்ய முயன்ற எவருக்கும் இந்தியா எப்போதும் பொருத்தமான பதிலை தந்துள்ளது.

இந்தியா அமைதியையும், நட்பையும் விரும்பும் நாடு. ஆனால் அமைதிக்கான இந்த உறுதிப்பாட்டை இந்தியாவின் பலவீனமாக கருதக்கூடாது. பலவீனமானவர்களால் அமைதியை முன்னெடுக்க முடியாது. தைரியமும், துணிச்சலும் இருந்தால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும். அதை இந்திய ராணுவம் நிரூபித்துள்ளது. இந்திய வீரர்களின் வீரத்தையும், தைரியத்தையும் இந்த உலகுக்கு நீங்கள் நிரூபித்து காட்டி உள்ளீர்கள். நீங்கள் பாதுகாக்கும் இமயமலையை விட உயரமானது உங்கள் வீரம். உங்களால் தற்போது தகர்க்க முடியாத நம்பிக்கையை நாடு கொண்டுள்ளது. உங்கள் தைரியத்தை, துணிச்சலை, தியாகத்தை இந்த நாடு ஒருபோதும் மறக்காது. நாங்கள் அனைவரும் உங்களை எண்ணி பெருமை கொள்கிறோம்.

இன்று இந்தியா ராணுவம், கடற்படை, விண்வெளி, வான்வளி என அனைத்து விதத்திலும் வலுவடைந்து வருகிறது. ஆயுதங்களை நவீனமயமாக்குதல், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் என நாட்டின் பாதுகாப்பை பன்மடங்கு உயர்த்தி உள்ளது. ஆயுதப்படைகளின் தேவையில் அரசு கவனம் செலுத்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடியின் உணர்ச்சிமிகு பேச்சை கேட்ட ராணுவ வீரர்கள், பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் என கோஷமிட்டனர். கல்வான் மோதலில் பலியான 20 வீரர்களுக்கும் பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

* சிக்கலாக்க கூடாது  சீனா எச்சரிக்கை
மோடியின் லடாக் பயணம் குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியன், ‘‘சீனாவும், இந்தியாவும் ராணுவ மற்றும் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருதரப்பு உடன்படிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு எல்லையில் விரைவில் அமைதி திரும்புவதை சீனா உறுதி செய்யும். அதே சமயம், இரு தரப்பும் எல்லை நிலைமையை சிக்கலாக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது’’ என்றார். இந்தியாவில் சாலை அமைக்கும் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு தடை மற்றும் சீன நிறுவனங்களில் ஏற்றுமதிக்கான சுங்க அனுமதியில் தாமதம் ஏற்படுவது குறித்து லிஜியன் கூறுகையில், ‘‘இந்தியாவில் எங்களின் வணிகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுப்போம். சீனாவை இந்தியா தவறாக மதிப்பிடக் கூடாது’’ என்றார்.

அடுத்த எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு...
சீனாவை தொடர்ந்து அடுத்ததாக பாகிஸ்தானையும் இந்தியா எச்சரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் தீவிரவாதிகளை ஊடுருவ உதவும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகிறது. ஜூன் மாதம் வரையிலான இந்த ஆண்டில் மட்டும் அது 2,432 துப்பாக்கிச்சூடு சம்பவங்களை எல்லையில் நடத்தி இருக்கிறது. இதில், 14 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். 88 பேர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதாகவும், இதுபோன்ற அத்துமீறலை உடனடியாக நிறுத்த வேண்டும் என ராணுவ உயர்மட்ட அளவில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ராணுவ தகவல்கள் தெரிவித்துள்ளன.

* காயமடைந்த வீரர்களை சந்தித்து நலம் விசாரிப்பு
கல்வான் மோதலில் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களையும் பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுடன் பேசுகையில், ‘‘இன்று நம்மை விட்டு பிரிந்த துணிச்சல்மிகு நம் வீரர்கள் சரியான பதிலடியை தந்துள்ளனர். உங்கள் வீரமும், நீங்கள் சிந்திய ரத்தமும் இளைஞர்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கும். உங்கள் வீரத்தை பார்த்து இந்த உலகே வியக்கிறது. நம்நாடு யாரிடமும் அடிபணியாது. எந்த உலக சக்தியிடமும் அடிபணிந்து விடாது. உங்களைப் போன்ற தைரியசாலிகள் இருப்பதால், இதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்’’ என்றார்.

* ராணுவ வீரர்களின் மனஉறுதி அதிகரிக்கும்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டரில், ‘மோடி இன் லே’ என்ற ஹேஷ்டேக் மூலம் பிரதமர் மோடியின் லடாக் பயணத்தை பாராட்டினார். அவர் தனது பதிவில், ‘முன்னால் நின்று தலைமை வகிக்கிறார். பிரதமர் மோடியின் இந்த பயணம் நமது வீரமிகு வீரர்களின் மனஉறுதியை மேலும் வலுப்படுத்தும்,’ என புகழ்ந்துள்ளார்.

* யாரோ ஒருவர் பொய் சொல்கிறார்
பிரதமர் மோடி திடீரென லடாக் பயணம் மேற்கொண்ட நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று தனது சந்தேகத்தை தொடர்ந்து எழுப்பினார். அவர் டிவிட்டர் பதிவில், ‘சீனா எங்கள் நிலத்தை அபகரித்து விட்டது என லடாக் மக்கள் கூறுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி யாரும் நமது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்கிறார். இரண்டும் வெவ்வேறாக இருப்பதால், யாரோ ஒருவர் பொய் சொல்கிறார்,’ என கூறியுள்ளார். இதோடு, இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமித்து உள்ளதாக லடாக் பகுதியை சேர்ந்த சிலர் கூறும் வீடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.


Tags : India ,Modi ,border ,Ladakh India , Border, transgressor, India retaliation, Ladakh survey, PM Modi, China
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!