பிளாஸ்டிக் வேகத்தடை உடைந்ததால் வாகனங்களை பதம் பார்க்கும் இரும்பு ஆணிகள்

புதுச்சேரி: புதுவையில் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் நகர, கிராமப்புறங்களில் ஆங்காங்கே சாலைகளில் பிளாஸ்டிக் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இதற்கு பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பின. தேவையற்ற இடங்களில் அமைக்கப்படும் வேகத்தடைகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் ஆங்காங்கே பிளாஸ்டிக் வேகத்தடைகளை அமைத்தனர். இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் நடந்து மக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் இவ்வாறு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் வேகத்தடைகளில் பெரும்பாலானவை தற்போது கனரக வாகனங்களால் உடைந்து பெயர்ந்து விட்டன.

ஆனால் பிளாஸ்டிக் வேகத்தடைகளை பொருத்த பயன்படுத்திய இரும்பு ஆணிகள் மட்டும் சாலைகளில் அப்படியே இருக்கின்றன. இவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் டயர்களை மட்டுமின்றி மக்களின் கால்களையும் பதம்பார்த்து வருகின்றன. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி டிரைவர்களும், பொதுமக்களும் அவதியுறுவதை காண முடிகிறது. எனவே இதுபோன்ற சாலைகளில் உள்ள இரும்பு ஆணிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. பிளாஸ்டிக் வேகத்தடைகளை அமைப்பதில் வேகம் காட்டிய அதிகாரிகள், இதையும் சற்று கவனிப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related Stories: