×

பன்னீர் திராட்சை விலை பாதியாக குறைந்தது: விவசாயிகள் சோகம்

சின்னாளபட்டி: கொரோனா ஊரடங்கால் திராட்சை விலை கடுமையாக சரிந்துள்ளது. கிலோ ரூ.80 வரை விற்ற திராட்சை தற்போது பாதிக்குப்பாதி விலை குறைந்து ரூ.40க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள சிறுமலை அடிவார கிராமங்களான ஜாதிகவுண்டன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, அமலி நகர், ஜே.ஊத்துப்பட்டி, வெள்ளோடு, செட்டியபட்டி, மெட்டூர், கொடைரோடு, காமலாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 35 வருடங்களாக திராட்சை சாகுபடி நடந்து வருகிறது. கொடி திராட்சை, கருந்திராட்சை, பன்னீர் திராட்சை இங்கு விளைவிக்கப்படும்.

மண் வளம் மற்றும் சிறுமலையில் இருந்து வரும் ஊற்று நீரால் இங்கு விளையும் திராட்சை நன்கு ருசியுடன் இருக்கும். இதனால் இங்கு விளையும் திராட்சைக்கு தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளாவில் தனி மவுசு உண்டு. இங்கு கடந்த 2 ஆண்டுகளாக மழை சரிவர பெய்யாததால் திராட்சை விளைச்சல் குறைந்தது. இந்தாண்டு பெய்த மழையால் திராட்சை அமோகமாக விளைந்துள்ளது. ஆனால் விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஊத்துப்பட்டியை சேர்ந்த திராட்சை விவசாயி தினேஷ்குமார் கூறுகையில், ‘‘வருடத்திற்கு 3 முறை திராட்சை அறுவடை செய்து வருகிறோம்.

பூச்சி புழுக்களிலிருந்து திராட்சையை மருந்துகள் மூலம் காப்பாற்றி வந்தாலும், திராட்சை பழம் பழுத்தவுடன் பறவைகளிடம் இருந்து காப்பாற்ற மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. தற்போது திராட்சை தோட்டங்களில் காய்கள் அதிகளவில் பழுத்து வருவதால் அவற்றை பறித்து வருகிறோம். கொரோனா ஊரடங்கு இல்லாத காலங்களில் ஒரு கிலோ திராட்சை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்றது. தற்போது ரூ.40க்கு தான் விற்கப்படுகிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.



Tags : Paneer grapes, farmers
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை