மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த அரசாணையை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த அரசாணையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. மதுரையில் ஜப்பான் கூட்டுறவு நிதி நிறுவனம் உதவியுடன் தோப்பூரில் 263 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதுபற்றி உறுதியான எந்த தகவலையும் மத்திய அரசு கூறவில்லை. இந்நிலையில், இன்று மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அரசிதழில் வெளியிட்டுள்ளது.

எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு ரூ.1,264 கோடி நிதியை மத்திய அரசு, ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்று மருத்துவமனை கட்ட உள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜப்பான் நாட்டு நிதிக் குழுவினர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு சென்ற நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: