மேட்டூர் அணை நீர்மட்டம் 3 வாரத்தில் 13.52 அடி சரிவு: டெல்டா விவசாயிகள் கவலை

மேட்டூர்: வரத்தை விட பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 வாரங்களில் 13.52அடி சரிந்துள்ளது. மேட்டூர் அணை மூலம் டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 101.73 அடியாக இருந்ததால் குறித்த நாளான ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.  தொடக்கத்தில் வினாடிக்கு 2000 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக 10 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது. ஜூலை 1ம் தேதி பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

 நீர்வரத்து குறைந்த நிலையில் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது. நாளொன்றுக்கு 1.10அடி வீதம் நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஜூன் 12ல் 101.73 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 88.21 அடியாக சரிந்தது. மூன்று வார காலத்தில் அணையின் நீர்மட்டம் 13.52 அடி சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பருவமழை கை கொடுத்தால் மட்டுமே முப்போக சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. இன்று அணைக்கு விநாடிக்கு  938 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 50.63 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: