புதுச்சேரி மத்திய பல்கலையில் ஆகஸ்ட் 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு: 17ம் தேதி முதல் வழக்கமான வகுப்புகளைத் தொடங்க வாய்ப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலையில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல் நிலவி வரும் நிலையில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. இது தொடர்பாக புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகப் பதிவாளர் சித்ரா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், ஆன்லைன் வகுப்புகளுடன் அனைத்துப் பல்கலைக்கழகத் துறைகள், மையங்கள் ஆகியவற்றுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் கல்வி அமர்வு தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாணவர்களுக்கு வளாகத்தைத் திறக்க வாய்ப்புள்ளது. தொற்று நிலை மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவுகளைப் பொறுத்து வளாகத்திற்குள் நுழைவதற்கான முறைகள் மற்றும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் வழக்கமான வகுப்புகளைத் தொடங்குவது குறித்து சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும். பல்கலைக்கழக இணையதளத்தில் தொடர்ந்து இது தொடர்பான விவரங்கள் பதிவிடப்படும். பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் இணையத்தில் அடுத்தகட்டத் தகவலை அறியலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: