பாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து: 19 பேர் பலியான சோகம்!

ஷேக்புரா: பாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 19 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ஷேக்புரா மாவட்டத்தின் பரூக்காபாத் ரயில் நிலையம் அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது. நான்கானா சாஹிப் வழிப்பாட்டுத் தளத்தில் இருந்து லாகூர் வழியாக சீக்கிய யாத்ரிகர்கள் ஒரு பேருந்தில் வந்துக்கொண்டு இருந்தனர். அப்போது ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை கடந்தபோது அவ்வழியாக லாகூர் சென்றுகொண்டிருந்த விரைவு ரயில், பேருந்தின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  இதில், ஐந்து பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஷேகுபுரா விபத்தில் உயிரிழந்துள்ள யாத்ரீகர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கேட்டுகொண்டுள்ளார். மேலும் ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஷேக்புரா ரயில்வே அதிகாரி முகம்மது காஸி சலாவுதீன், ரயில்வே இன்ஞ்ஜினியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: