அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை: கைதான ராஜா என்பவர் மீது போக்சோ, கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை சம்பவத்தில் கைதானவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வன்மையான கொலைசம்பவம் தொடர்பாக கைதான ராஜா என்பவர் மீது, போக்சோ, கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்கோயில் அருகே ஏம்பல் கிராமத்தில் காணாமல் போன சிறுமியை சடலமாக போலீசார் மீட்டுள்ளனர். ஆவுடையார்கோயில் அருகே ஏம்பல் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி நாகூரான்- செல்வி தம்பதியின் மகள் ஜெயபிரியா, அரசுப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.

வீட்டின் முன்பாக நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஜெயபிரியா, திடீர் என்று மாயமாகியுள்ளார். அப்பகுதியில் தேடி அலைந்த பெற்றோர், பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்ததை அறிந்த போலீசார், அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. உடல் முழுவதும் கடித்து வைக்கப்பட்டதால் காயங்கள் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இவ்விவகாரத்தை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: