கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வீடியோ கால் மூலம் மருத்துவ உதவி!: மதுரையில் அறிமுகம்

மதுரை: மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு புதிய முயற்சியாக வீடியோ கால் மூலம் மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் மையத்தில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்து வருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை எடுபவர்களை தினமும் இரண்டு முறை தொடர்பு கொண்டு அவருடைய உடல்நிலை, நோய் அறிகுறி உள்ளிட்டவைகளை அவர்கள் கேட்டறிகின்றனர்.

தொடர்ந்து, தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு 14 நாட்கள் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. 14 நாட்களுக்கு பிறகு ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை ஆய்வு செய்த பின்பு, அவர்கள் நோய் தொற்று இல்லாதவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். நோய் அறிகுறிகள் அதிகரித்தால் உடனடியாக அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வரும் நிலையில், முகாம்கள் நிரம்பி வழிய தொடங்கியிருக்கிறது. இதையடுத்து நோய் அறிகுறிகள் இல்லாமல் நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அவர்களின் சொந்த வீடுகளில் இருந்து தனிமைப்படுத்தி சிகிச்சை எடுக்கும் திட்டம் மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 189 பேர் வீடுகளில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Related Stories: