×

பைலட் பயிற்சிக்கு சேமித்த பணத்தில் கொரோனா உதவி: அசத்தும் தேனி மாணவி

தேனி: விண்வெளி வீராங்கனையாவதற்கு பைலட் பயிற்சி பெற சேமித்து வைத்திருந்த ரூ.4 லட்சம் பணத்தில் தேனி மாணவி ஏழை குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கி வருகிறார். தேனியை சேர்ந்த எழுத்தாளர் தாமோதரனின் மகள் உதயகீர்த்திகா. இவருக்கு விண்வெளி வீராங்கனையாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். இவர் 10-வது படித்த போது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விண்வெளியின் பங்கு என்ற தலைப்பில் நடந்த இப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதேபோல் 12-ம் வகுப்பிலும் முதலிடம் பெற்றதால் இஸ்ரோ செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பின்பு உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நேஷனல் ஏர் ஃபோர்ஸ் யுனிவர்சிட்டி என்ற அந்நாட்டு விமானப்படைப் பல்கலைக்கழகத்தில், ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் என்ற நான்காண்டு கால சிறப்புப் பொறியியல் கல்வியை முடித்தார். தொடர்ந்து போலந்து நாட்டில் உள்ள அனலாக் விண்வெளி பயிற்சி மையத்தில் சேர்ந்தார். சர்வதேச அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 20 பேரில் இந்தியா சார்பில் சென்ற ஒரே நபர் இவர்தான்.

தனது கனவான விண்வெளி வீரராக பைலட் பயிற்சி அவசியம் என்பதை அறிந்தார். இதற்கான நுழைவுத்தேர்வை எழுத தற்போது டெல்லியில் பயிற்சி பெற்று வருகிறார். மூன்று மாத பயிற்சியில் தற்போது ஒரு மாதம் முடிந்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே பயிற்சி நிறுவனம் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் சொந்த ஊரான தேனிக்கு வந்துவிட்டார். கொரோனாவினால் வேலையையும், வருமானத்தையும் இழந்து கஷ்டப்படும் பலரையும் பார்த்தவர் அவர்களுக்கு உதவ முன்வந்தார். இதற்காக பைலட் பயிற்சி பெற சேமித்து வைத்திருந்த ரூ.4 லட்சம் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறார்.Tags : Corona ,student ,Asante Theni Corona , Corona, aid, student
× RELATED புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி