புதுக்கோட்டை சிறுமி உடல் ஒப்படைப்பு: ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோர் அஞ்சலி!!!

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் 7வயது மகள், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் உறவினர்கள் வீடுகள், பொது இடங்கள் எனப் பல இடங்களில் தேடியுள்ளனர். இதையடுத்து ஏம்பல் போலீஸாரிடம் சிறுமியைக் காணவில்லை எனப் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடிவந்தனர். இந்நிலையில்தான், அவர்களின் வீட்டிற்கு அருகே உள்ள கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய்க் கரையில் சிறுமி சடலமாகக் கிடந்துள்ளார். சிறுமியின் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்தன.

இதையடுத்து, சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்விற்கு பின், பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியும், காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தியும் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, பேசிய அவர் சிறுமியின் உடலை சிதைத்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அறந்தாங்கியின் அருகே உள்ள சிறுமியின் சொந்த ஊரான ஏம்பல் கிராமத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூர முறையில் கொன்ற ராஜா என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: