×

தாயகம் திரும்புவோருக்கான செலவை அரசு ஏற்பதே சரி.. வெளிநாடுவாழ் தமிழர்களின் நிலையினைப் புரிந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

சென்னை: நெருக்கடியான நிலையில் தாயகம் திரும்புவோருக்கான செலவை அரசு ஏற்பதே சரி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வந்தே பாரத் திட்டத்தில்  தமிழகத்திற்கு போதுமான விமானச் சேவைகள் நடைபெறவில்லை. இதுகுறித்து, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அயல்நாடுகளில் பரிதவிக்கும் தமிழர்களை அழைத்துவர வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதன் மீதான விசாரணையில் பதில் அளித்துள்ள மத்திய அரசு, தமிழகத்தில் விமானம் தரையிறங்கத் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என ஜூன் 30 அன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஜூலை 2 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களின் வாயிலாக, 10 மடங்கு அதிக கட்டணமும் தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல் கட்டணமும் உள்ளடக்கிய சார்ட்டர்டு விமானங்களில் வரும் பயணிகளை மட்டுமே தமிழக அரசு அனுமதிக்கிறது என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலர் ஒருவேளை உணவோ அல்லது அதற்கும் வழியின்றியோ வீதிகளில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மத்திய அரசின் அறிக்கையின்படியே, 27ஆயிரத்து 956 தமிழர்கள் வெளிநாட்டில் தவிக்கிறார்கள் என்பதையும், அவர்கள் தங்களை மீட்கும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார். மூத்த வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்டறிந்த உயர்நீதிமன்றம், வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான சாதகமான திட்டத்துடன், வரும் திங்களன்று பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே மிகக்குறைந்த அளவே தமிழகத்திற்கு விமானச் சேவை இயக்கப்படுகிற நிலையில், அதில் தாயகம் திரும்பும் வெளிநாடுவாழ் தமிழர்களிடம் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்காக அதிக தொகை வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்நியச் செலாவணி ஈட்டித்தந்த அவர்கள் இப்போது நெருக்கடியான நிலையில் தாயகம் திரும்பும்போது, அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்வதுதான் சரியாக இருக்கும்.இனியும் இதுபோன்று அலட்சியம் காட்டாமல், வெளிநாடுவாழ் தமிழர்களின் நிலையினைப் புரிந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான செயல்பாடுகளை எப்போதும் திமுக மேற்கொண்டு, அவர்களுக்கு எந்நாளும் துணை நிற்கும்”.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : Government ,home , Homeland, Expenditure, Government, Foreigners, Tamils, Tamil Nadu Government, MK Stalin, Emphasis
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்