கொரோனா தடுப்பு மருந்து..எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரிக்கு சுகாதாரத்துறை அனுமதி

சென்னை: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு ஆய்வு மேற்கொள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. உலக  நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. மலேரியா எதிர்ப்பு மருந்து உள்ளிட்ட சில மருந்துகளை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தந்து பல நாடுகள் நிலைமையை சமாளித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் கோவிட் 19 புதிய வகையான வைரஸ் என்பதால், இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது கடும் சவாலான பணியாக உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா நோய்த் தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் களத்தில் இறங்கியுள்ளது. இந்தியாவிலும் இதற்கான முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில், பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த மருந்து விலங்குகளிடையே வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதால், மனிதர்களிடையே பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்தது.

புனேயில் உள்ள தேசிய வைராலஜி மையத்தில் சார்ஸ் கோவ் 2 கிருமியில் இருந்து பிபிவி 152 கோவிட் வாக்சின் (BBV152 COVID Vaccine) எனப் பெயரிடப்பட்டுள்ள மருந்தை உருவாக்கி வருகின்றன. அந்த மருந்தை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குக் கொடுத்து சோதிக்கப்பட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவ முறையிலான அனைத்துச் சோதனைகளும் முடிவடைந்து ஆகஸ்டு 15ஆம் தேதி இந்த மருந்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுவரை உலக அளவில் 17 தடுப்பு மருந்துகள் மனிதர்களிடையே பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. இதுவரை எஸ்.ஆர்.எம் உள்பட 13 மருத்துவ கல்லூரிக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: