×

இறந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி நிவாரணம் கோரி என்எல்சி 2வது அனல் மின்நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

நெய்வேலி:  நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து சிதறியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே நேற்று காலை பணிக்கு சென்ற தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் முதல் மற்றும் இரண்டாவது, முதலாவது விரிவாக்கம் என மூன்று நிலக்கரி சுரங்கங்களும், 5 அனல் மின் நிலையங்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

மின்சார உற்பத்தி பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், அதிகாரிகள் என 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 2ம் அனல்மின் நிலையத்தில் மொத்தமாக 7 யூனிட்டில் 1470 மெகா வாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் ஷிப்ட்டில் 2 ஆயிரம் பேர் பணியில் இருந்தனர். அப்போது அங்குள்ள ஐந்தாவது யூனிட் பகுதியில் உள்ள பாய்லரின் அழுத்தம் தாங்காமல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வெங்கடேச பெருமாள்(28), சிலம்பரசன் (25), பத்மநாபன்(28), அருண்குமார்(27), நாகராஜ் (36), ராமநாதன்(46) ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் உடல் கருகி இறந்தனர்.

படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 17 பேரும் ஆம்புலன்ஸ் மூலமாக என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணத்தொகையும், ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டுமென அனைத்து தொழிற்சங்கத்தினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் ஒருசிலரை தவிர மற்ற அனைவரும் பணிக்கு செல்லாததால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து ஏற்பட்ட இரண்டாவது அனல்மின்நிலையத்தில் 4, 5, 6 மற்றும் 7வது யூனிட்களில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானது என்றும், விரைவில் சரி செய்யப்படும் என நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 30 லட்சம் நிவாரணம்: ஒருவருக்கு வேலை: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இந்நிலையில், நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையில் எம்எல்ஏக்கள் சபாராஜேந்திரன், கணேசன், துரை கி. சரவணன், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், நெய்வேலி தொமுச நிர்வாகிகள் மற்றும் பாமக, தவாக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் என்எல்சி அதிபர் ராகேஷ்குமார், மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன் மற்றும் இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க தீர்மானிக்கப்பட்டு அதற்கான நகல் வழங்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கு வேலையில் முக்கியத்துவம் கொடுப்பது சம்பந்தமாக அதிகாரிகள் குழு அமைத்து தீர்மானிக்கப்படும்.  மேலும், இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து முண்டியம்பாக்கத்தில் உள்ளவர்களின் உடல்களை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்களது உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.


Tags : Relatives ,NLC ,power plant ,relief Relatives , NLC 2nd Anal Power Station, Siege Struggle
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...