சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமியை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: குற்றவாளிகளை முதல்வர் காப்பாற்ற முயற்சிப்பதாக புகார்!!

டெல்லி : சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமியை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் தொடர்ந்த மனுவில், தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே அவர்கள் உடல்நலக்குறைவு கோளாறு காரணமாக தான் உயிரிழந்தார்கள் என்று முதல்வர் பழனிசாமி முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்பட்டுள்ளது. இது குற்றவாளிகளை காப்பாற்றும் செயலாக கருதி கொலை வழக்கில் முதல்வருக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி காவல்துறையும் முதல்வர் பழனிசாமியின் வசம் உள்ள உள்துறை இலாக்காவின் கீழ் வருவது மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த இலாக்காவை முதல்வர் பழனிசாமி வைத்திருந்தால், இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணை நேர்மறையாக நடைபெறாது என்றும் வழக்கு முடியும் வரை உள்துறை இலாக்கா பொறுப்பை முதல்வர் பழனிசாமி வைத்திருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: