×

ரேஷனில் ஜூன் மாதத்திற்கான இலவசப் பொருட்களை பெற வரும் 10ம் தேதி வரை கால அவகாசம் : உணவுத்துறை அமைச்சர் காமராஜ்!!

சென்னை: ரேஷனில் ஜூன் மாதத்திற்கான இலவசப் பொருட்களை பெற இம்மாதம் 10ம் தேதி வரை  
கால அவகாசத்தை நீட்டித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார். தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், ரேஷனில் அனைத்து கார்டுதாரர்களுக்கும், ஏப்ரல் முதல், ஜூன் மாதம் வரை, அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதனிடையே சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில், ஜூன் மாதம், 19ம் தேதி முதல், 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட பகுதிகளிலும், முழு வீச்சில் தொழில்கள் செயல்படாததால், மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது. எனவே. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ரூ.1000 நிவாரணம் 22 முதல் 26ம் தேதி வரை வீடு வீடாகச் சென்று தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஜூன் 22 முதல் 26 வரை ரேஷன் கடைகள் இயங்கவில்லை. எனவே ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்காதவர்களுக்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷனில் ஜூன் மாதத்திற்கான இலவசப் பொருட்களை பெற இம்மாதம் 10ம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Kamaraj , Ration, June, Free Goods, Time, Food Minister, Kamaraj
× RELATED தொற்று பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு...