நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.45 லட்சம் கையாடல்?: பெண் நிர்வாகி மீது போலீசில் புகார்!!!

சென்னை: நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன அலுவலத்தில் பணியாற்றிய பெண் 45 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷால் ஃபிலிம் பேக்ட்ரி என்ற பெயரில் நடிகர் விஷால் சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். தற்போது துப்பறிவாளர் 2, சக்ரா ஆகிய படங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனத்தின் அலுவலகம் சென்னை வடபழனி குமரன் காலனியில் இயங்குகிறது.

இந்த அலுவலகத்தின் மேலாளர் ஹரி வடபழனி காவல்துறை உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசத்திடம் புகார் ஒன்று அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தங்கள் அலுவலகத்தில் கணக்கு பிரிவில் 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பெண் ரம்யா என்பவர், சிறிது சிறிதாக 45 லட்சம் பணத்தை கையாடல் செய்துவிட்டது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணங்களை சரிபார்த்த போது இது தெரிய வந்ததாகவும், கையாடல் செய்த பணத்தை கொண்டு சொந்தமாக வீடு வாங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்த பெண் கோடி கணக்கில் பணத்தை கையாடல் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதருமாறும் புகாரில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, புகாரைப் பெற்றுக்கொண்ட வடபழனி உதவி ஆணையர் இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்த விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: