159 வருடங்களில் முதல்முறையாக வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் காவல்துறை வசம் ஒப்படைப்பு!!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

159 வருடங்களில் முதல்முறை... வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்.

*தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

*இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்கள்.

*உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுப்படி, சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவில்பட்டி நீதித்துறை மாஜிஸ்திரேட் தலைமையில் நீதி விசாரணை நடைபெற்று வருகிறது.

*முந்தைய விசாரணையின் போது, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை என்பதை அறிந்த நீதிபதிகள், சாத்தான்குளம் காவல்நிலையத்தின் ஆவணங்கள்,

தடயங்களைப் பாதுகாத்திடும் வகையில் வருவாய்த்துறை அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டனர்.

*இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையம் முழுவதும் வருவாய் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவுப்படி ,சமூகப் பாதுகாப்புத்துறை தனி தாசில்தார் செந்தூர்ராஜனின் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம் கொண்டுவரப்பட்டது.

*1861-ல் இந்திய போலீஸ் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு காவல்நிலையத்தை வருவாய்த்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது.

அரசு தரப்பு வாதம்

இந்நிலையில் சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி சில வாதங்களை முன் வைத்தார்.

*அதாவது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்து வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி போலீஸ் மற்றும்  மாஜிஸ்திரேட்டும் கைப்பற்றினர். சிபிசிஐடி காவல் துறையினர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தங்களது விசாரணையை முடித்து விட்டனர். தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்துவிட்டனர். எனவே காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். என்று அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

 காவல்நிலையம் போலீசாரிடம் ஒப்படைப்பு

*அரசு தரப்பு முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர். மேலும் சாத்தான்குள காவல் நிலையத்தில் இருந்து வருவாய்த்துறை அதிகாரியை திரும்பப் பெற தூத்துக்குடி ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

*அத்துடன் சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீண்டும் தங்கள் பணிக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து காவல்நிலையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: