உ.பி., பீகாரில் கனமழை எதிரொலி: இடிமின்னல் தாக்கி புதிதாக 31 பேர் உயிரிழப்பு!

லக்னோ: பீகார், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதியதாக இடி மின்னலுக்கு 31 பேர் நேற்று உயிரிழந்திருப்பது அப்பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், அசாம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

இந்நிலையில் பீகார் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதியதாக இடி மின்னலுக்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை, வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், புதியதாக 31 பேர் இடிமின்னல் தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அசாமில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலியானார். ஏராளமான விளைநிலங்கள் மழையால் வெள்ளம் போல் காட்சியளிக்கின்றன. சுமார் 73 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.

அசாமில் உள்ள 33 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் மிதக்கின்றன. அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் மழை கொட்டிய போதும், தலைநகர் டெல்லியில் இயல்பான பருவநிலையே காணப்படுகிறது.

Related Stories: