×

சீனாவுடன் எல்லை மோதல் எதிரொலி..லடாக்கின் லே பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு..: போர் பதற்றம் அதிகரிப்பு

லடாக்: சீனாவுடன் எல்லை மோதல் நடந்த லடாக் பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு செய்து வருகிறார். லடாக்கின் லே பகுதிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நிலைமையை ஆய்வு செய்து வருகிறார்.  கிழக்கு லடாக் எல்லையில் இந்திய பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டது. சீனாவின் இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் தங்கள் இன்னுயிரை தந்து முறியடித்தனர். இதன் காரணமாக இந்தியா-சீனா இடையேயான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. சீனாவை வர்த்தக ரீதியாகவும் பதிலடி தர இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக சீனாவை சேர்ந்த புகழ்பெற்ற டிக்டாக் உட்பட 59 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து சீனா மீது உலக நாடுகளும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றன. இந்தியா உடனான மோதல் மட்டுமின்றி, ஹாங்காங் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் வகையில் சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றி உள்ளது. தென் சீன கடல் பகுதியிலும் உரிமை கொண்டாடி, சிறு சிறு அண்டை நாடுகளுடன் விரோதத்தை வளர்த்துள்ளது.

தற்போது, இந்த விவகாரங்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்து சீனாவுக்கு எதிராக எட்டுத்திக்கும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஏற்கனவே, சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக போரில் ஈடுபட்டுள்ளது. இதனால், இந்தியாவைப் போலவே சீன ஆப்களுக்கு அமெரிக்காவிலும் தடை விதிக்க வேண்டும் என சிலிக்கான் வேலியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும், பலமிக்க செனட் எம்பி.க்களும் வலியுறுத்தி உள்ளனர்.

சீனாவுடன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள், ஆயுதங்களை ரூ.38,900 கோடிக்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது லடாக் பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு செய்து வருவது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் பிரதமர் மோடியுடன் முப்படைத்தளபதி பிபின் ராவத்தும் லடாக் சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Border conflict ,China ,Modi ,Ladakh ,Leh , Border ,conflict ,China ,s PM Modi,sudden ,survey
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...