உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், வீரியம் மிக்க கொரோனா வைரஸின் ஊடுருவலை நாங்கள் முற்றிலுமாகத் தடுத்துள்ளோம்: வட கொரிய அதிபர் பேச்சு

பியாங்யாங்: உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், வீரியம் மிக்க கொரோனா வைரஸின் ஊடுருவலை நாங்கள் முற்றிலுமாகத் தடுத்துள்ளோம் என வட கொரிய அதிபர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியதுடன், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகள் ஊரடங்கு கட்டுப்படுகளை தளர்த்தி உள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் ஊடுருவாமல் வட கொரியா தடுத்துவிட்டதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பேசிய அவர், உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், வீரியம் மிக்க வைரஸின் ஊடுருவலை நாங்கள் முற்றிலுமாகத் தடுத்துள்ளோம். தொற்றுநோய்க்கு எதிரான ஒரு நிலையான சூழ்நிலையை பராமரித்துள்ளோம், இது ஒரு பிரகாசமான வெற்றியாகும்.

அதேசமயம் தொற்றுநோய்க்கு எதிரான முயற்சியில் சுய-மனநிறைவு அடைந்துவிட்டதாக கருதக் கூடாது. இன்னும் அதிகபட்ச எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும், என பேசியுள்ளதாக அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது வட கொரியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்றும், இதுவரை பரிசோதிக்கப்பட்ட 922 பேருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் நில எல்லைகளில் சரக்கு கையாளுபவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் தொடர்ந்து கண்காணிப்பதற்காக தனிமைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் ஜனவரி மாதமே வட கொரியா சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டது. ஆயிரக்கணக்கானோரை தனிமைப்படுத்தி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories: