முன்விரோதத்தில் முதியவர் கத்தியால் குத்தி கொலை: குற்றவாளி கைது

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி பஜார் தெருவை சேர்ந்தவர் கோபால் (61). இவர் அவரது மகன் ராஜா என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில்  கோபால் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கி  கொண்டிருந்தார். அப்போது அதிகாலை கோபாலின் அலறல் சத்தம் கேட்டு, உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது கோபாலின் கை மற்றும் மார்பில் கத்தி குத்து பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.  

தகவல் அறிந்து வந்த கோபாலின் மகன் ராஜா கொடுத்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கோபாலின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணையில் கோபாலுக்கும் பக்கத்தில் வசிக்கும் கஜேந்திரன்(52) என்பவருக்கு முன்விரோதம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து  சிப்காட் போலீசார் சந்தேகத்தின் பேரில் கஜேந்திரனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் 1993ம் ஆண்டு, தற்போது கொலையான கோபால் மற்றும் சிலர் சேர்ந்து கஜேந்திரனின் தந்தை பலராமனை கொலை செய்துள்ளனர்.

இதனால்  கோபால் சிறை தண்டனை பெற்று சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலையானார். மேலும் கோபாலுக்கும் தனக்கும் நில தகராறு உள்ளதாகவும், இந்த இரு காரணங்களுக்காக கோபாலை கஜேந்திரன் கத்தியால் குத்தி கொன்றதாக ஒப்புக் கொண்டார். தொடர்ந்து போலீசார் கஜேந்திரன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

Related Stories: