×

அறந்தாங்கி அருகே பயங்கரம் பலாத்காரம் செய்து சிறுமி கொடூர கொலை: பூக்கடைக்காரர் கைது

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த பூக்கடைக்காரரை போலீசார் நேற்று கைது செய்தனர்.  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ஏம்பல் அம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் நாகூரான்(65). இவரது 3வது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள். செல்வி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இவரது மூத்த மகளான 7 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 29ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரின்படி ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஏம்பல் கீதவிதம்மம் ஏரியில் காட்டாமணக்கு செடிகளுக்குள் சிறுமி சடலமாக கிடந்ததாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சிறுமியின் உடல் முழுவதும் ஆங்காங்கே கடித்து குதறியது போல் காயங்கள் இருந்தது.

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  புதுக்கோட்டை எஸ்.பி., அருண்சக்திகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், சிறுமியை அப்பகுதி பூக்கடைக்காரர் ராஜா(25) என்பவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் ராஜாவை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
சிறுமி படுகொலையை கண்டித்தும் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், மேலும் சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்பதால் கூட்டாளிகளையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஏம்பல் பஸ் நிலையம் முன் பகல் 2.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.

குடும்பத்திற்கு ₹5 லட்சம்முதல்வர் எடப்பாடி உத்தரவு
 முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளி கைது செய்து செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

Tags : Aranthangi ,Florist , Charity, rape, girl, brutal murder
× RELATED ஜம்மு காஷ்மீரின் குல்காம் ...