வெளிநாடு வாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: மத்திய, மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: வெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வெளிநாடுகளில் வாழும் தமிழகத்தை சேர்ந்த பலரும் தாயகம் திரும்புவதற்காக காத்திருக்கும் நிலையில், அவர்களை திரும்ப அழைப்பதற்கான முயற்சிகளில் மாநிலத்தை ஆளும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அக்கறை காட்டவில்லை. இதுகுறித்து, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அயல்நாடுகளில் பரிதவிக்கும் தமிழர்களை அழைத்துவர வேண்டும் என கோரப்பட்டது. 10 மடங்கு அதிக கட்டணமும் தனிமைப்படுத்தலுக்கான ஓட்டல் கட்டணமும் உள்ளடக்கிய சார்ட்டர்டு விமானங்களில் வரும் பயணிகளை மட்டுமே தமிழக அரசு அனுமதிக்கிறது என்பது நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழர்களை தாயகம் அழைத்து வருவதற்கான சாதகமான திட்டத்துடன், வரும் திங்களன்று பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமனறம் அறிவுறுத்தியுள்ளது. வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கான விமானச் சேவைகளை இயக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டிய அதிமுக அரசு கிடைக்கின்ற வாய்ப்புகளையும் தவிர்ப்பது சரியான அணுகுமுறையல்ல. மிகக்குறைந்த அளவே தமிழகத்திற்கு விமானச் சேவை இயக்கப்படுகிற நிலையில், அதில் தாயகம் திரும்பும் வெளிநாடுவாழ் தமிழர்களிடம் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்காக அதிக தொகை வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இனியும் இதுபோன்று அலட்சியம் காட்டாமல், வெளிநாடுவாழ் தமிழர்களின் நிலையினைப் புரிந்து தமிழக அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: