குவியுது ரூ8 லட்சம் கோடி கடன் பாக்கி வீடு, வாகன கடன் தவணையை வசூலிக்க தாளிக்கப் போறாங்க: மண்டையை பிய்த்துக்கொண்டு அதிகாரிகள் தவிப்பு

மும்பை: வங்கியில் வீட்டுக்கடன், வாகன கடன் தவணை சலுகையை பெற்றவரா நீங்கள்? நீங்கள் என்ன....பல லட்சம் பேர் அப்படி  தான் இப்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஆனால், வங்கிகள், கொரோனா காலம் முடிந்ததும் தாளிக்க தயாராகி வருகின்றன. ஸ்டேட் பாங்க் உட்பட 5 முன்னணி வங்கிகள் மட்டும் வீடு, வாகனம் உட்பட பல கடன் பாக்கிகளுக்கு சலுகைகள் அளித்துள்ளன. கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் தவணை கட்ட வேண்டாம்; அப்புறம் கட்டினால்  போதும் என்று மத்திய அரசு கூறிவிட்டது. ஆனால், சலுகை என்றால், மக்களுக்கு பலன் தருமா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும்.

அப்படி தானே மின் கட்டண சலுகை முதல் எல்லாவற்றிலும் மக்களை தாளித்து வருகின்றன. வங்கிகளும் வட்டிமேல் வட்டி போட்டு படாதபாடு படுத்தப்போகின்றன என்று பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், சுப்ரீம்  கோர்ட் கடும் நடைமுறைகளை உருவாக்கி, மக்களை பாதிக்காமல் சலுகை பலன்களை தர வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில், வங்கிகள் அளித்த வீடு, வாகன உட்பட பல கடன் பாக்கிகளுக்கு தவணை காலத்தை கொரோனா பாதிப்பால் தள்ளிப்போட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் இந்த சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், ஸ்டேட் பாங்க், பாங்க் ஆப் இண்டியா, கனரா பாங்க், பரோடா பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க் ஆகிய 5 முன்னணி வங்கிகள் மட்டும் கடந்த சில மாதங்களில் 7.9 லட்சம்  கோடி ரூபாய் கடன் பாக்கி இருப்பதாக அறிவித்துள்ளன. கொரேனா பாதிப்பு காலம் முடிந்தபின் தான் மொத்த கடன் பாக்கி பற்றி இறுதி தொகை தெரியவரும். இப்போதுள்ளதை விட, 30 சதவீதம் வரை கடன் பாக்கி ெமாத்த தொகை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த கடன் பாக்கியை எப்படி வசூலிப்பது என்று வங்கிகள் மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருக்கின்றன.

காரணம், கொரோனா பாதிப்பு காலத்தில் கடன் தவணை கட்டாமல் இருப்பவர்கள் மட்டும் வைத்த கடன் பாக்கி என்றால் ஒரு சீரான நடைமுறையை வங்கிகள் பின்பற்ற முடியும். ஆனால், ஒவ்வொரு வங்கியிலும் கடன் பாக்கி பல விதங்களில் குவிந்துள்ளன. இதனால் வங்கிக்கு வங்கி கடன் பாக்கி தவணை வசூலிக்கும் நடைமுறை மாறுபடும் என்று தான் தெரிகிறது. மார்ச் மாதம் முன்பு வைக்கப்பட்ட கடன் தவணை பாக்கி, வட்டியை கட்டாமல் ஒரு நாள் கூட தாமதித்தால் வட்டி கூடிவிடும். அதுபோல பல வகையில் வட்டி தாமதித்தவர்களுக்கு வேறு வகையில் கணக்கிட வேண்டும்.

கொரோனா காலத்தில் கடன் தவணை பாக்கி வைத்தவர்களுக்கு தனியாக கணக்கிட வேண்டும். கடன் தவணை பாக்கியில் அதிகபட்சம் கடன் தவணை பாக்கி சேர்த்து வைத்துள்ளது ஸ்டேட் வங்கி தான். அங்கு மட்டும் ரூ. 7.9 லட்சம் கோடியில் ரூ. 5.63 லட்சம் கோடி கடன் தவணை பாக்கி உள்ளது. இப்போது கடன் தவணை சலுகை காலம் முடிந்ததும் வட்டி மற்றும் அசல் சேர்ந்துவிடும் என்பதால் கணக்கிடும் முறை வேறுபடும். இப்படி பல வகையில் கடன் தவணை பாக்கி, வட்டி பாக்கி வைத்தவர்களுக்கு கணக்கிடும் முறை மாறுபடும் என்பதால் பலருக்கும் கொரோனா பாதிப்பு காலம் முடிந்ததும், தலைவலி போய் திருகுவலி ஏற்படும் என்று பலரும் பயப்படுகின்றனர்.   

செப்டம்பரில் திருகுவலி

செப்டம்பர் வரை  தான் கடன் தவணை சலுகை  இருக்கும் என்று தெரிகிறது.  அதன் பின் வங்கிகள் மொத்த கடன்தவணை பாக்கியை கணக்கிட்டு, உடனுக்குடன் அக்டோபரில் புதிய தவணை தொகையை கணக்கிட்டு விடும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கடன் பாக்கி பலவிதம்

* வங்கிகள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போதே விதி மீறினால் தாளித்து விடும் என்பது தெரிந்தது தானே.

* ஒரு நாள் கடன் தவணை பாக்கி இருந்தாலும், வட்டி குட்டி போட்டு விடும்.

* 30 முதல் முதல் 60 நாள் வரை பாக்கி வைத்தால் அவர்களுக்கு தாளிப்பது பெரும் சுமையாக அமையும்.

* மார்ச்  முன்பு கடன்  தவணை பாக்கி வைத்துள்ளவர்களுக்கு தனியாக தவணை பாக்கி வட்டி கணக்கிடப்படும்.

* கொரோனா காலத்தில் சலுகை பெற்றவர்களுக்கு வேண்டுமானால் ஓரளவு குறைவாக தாளிக்கப்படலாம் என்று தெரியவருகிறது.

Related Stories: