அறந்தாங்கி சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என கனிமொழி எம்.பி. கருத்து!

சென்னை: அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைக்கிறது என கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே  உள்ள ஏம்பல் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த நாகூரான்-செல்வி தம்பதியரின் மகளான 7 வயது சிறுமி நேற்று முன்தினம் திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து ஏம்பல் காவல்நிலையத்தில் நேற்று அவர் புகார் அளிக்கவே, சிறுமியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள கண்மாயில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு கண்மாயில் வீசப்பட்டு இருப்பது உறுதியான நிலையில், அதற்கான காரணம், அவரை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை.

இதையடுத்து சிறுமியின் சடலம் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பப்பப்பட்டது. இந்தநிலையில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைக்கிறது. இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். நாட்டில் பெண்கள், சிறுவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் தடுக்கப்படுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும், என கூறியுள்ளார்.

Related Stories: