புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மேலும் இருவரை கைது செய்யக்கோரியும், உரிய நிவாரணம் வழங்க வேண்டியும் உறவினர்கள் கடைகளை அடைத்து போராட்டம்!!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவரை கைது செய்யக்கோரியும், உரிய நிவாரணம் வழங்க வேண்டியும் உறவினர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் 7வயது மகள், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் உறவினர்கள் வீடுகள், பொது இடங்கள் எனப் பல இடங்களில் தேடியுள்ளனர். இதையடுத்து ஏம்பல் போலீஸாரிடம் சிறுமியைக் காணவில்லை எனப் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடிவந்தனர்.

இந்நிலையில்தான், அவர்களின் வீட்டிற்கு அருகே உள்ள கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய்க் கரையில் சிறுமி சடலமாகக் கிடந்துள்ளார். சிறுமியின் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. இதையடுத்து, சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் சம்பவ இடத்திற்குச் சென்று இதுகுறித்து விசாரணை நடத்தினார். இந்நிலையில்தான், ஏம்பல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(29) என்பவரைச் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜேஷ், சிறுமியைத் தானே பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, ராஜேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக, உறவினர்களும், பொதுமக்களும் சிறுமியை கூட்டு பாலியல் செய்திருப்பதாக கருதி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் அங்கு வந்து காவலரிடம் இந்த பாலியல் வன்கொடுமையில் ஒருவர் மட்டுமே தவறு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், காவல் துறையினர் மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், சிறுமி இழப்பிற்கு முதலமைச்சர் தகுந்த நிவாரணம் வழங்க அறிக்கை வெளியிட வேண்டும் அல்லது மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதுதொடர்பாக, திமுக தலைவரும் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே பல அரசியல் தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: