திருப்பூரில் தாராளமாக செயல்படும் மதுக்கூடம்!: பார்களில் அமர்ந்து குடிக்கும் மதுபிரியர்கள்..காவல்துறை உடந்தையா?

திருப்பூர்: திருப்பூர் மாநகரத்தில் போலீசாரின் தடை உத்தரவையும் மீறி பல்வேறு மதுபான கடைகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வருகின்ற 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவின் காரணமாக தமிழக அரசின் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து மதுக்கடைகளை திறக்கலாம் என உத்தரவிட்டிருந்தது. மதுபானம் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானம் வாங்கி செல்ல வேண்டும்.

மேலும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. அதுமட்டுமின்றி மதுபான கூடங்கள் செயல்படக்கூடாது என்று அறிவித்து மதுபான கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் உத்தரவை மீறி மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் குடிமகன்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மதுபான கூடத்தில் கூடி மது அருந்துகின்றனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 100க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. பெரும்பாலான கடைகளில் உள்ள மதுபான கூடங்கள் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது.

இதில் முக்கியமாக பழைய பேருந்து நிலையம், தாராபுரம் சாலையில் உள்ள மதுபான கூடம், கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிலையில், சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 120 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 200ஐ நெருங்கி வரும் சூழலில் இதுபோன்ற மதுபான கூடங்களில் மதுபிரியர்கள் கூடுவதால் மேலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையோ, மது அமலாக்கத்துறையோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Related Stories: