கருணை காட்டுவாரா வருண பகவான் இன்னும் 63 செ.மீ. அளவில்தான் சிறுவாணியில் குடிநீர் உள்ளது

கோவை: சிறுவாணி அணை நீர் மட்டம் குறைந்து வறண்டது. இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே குடிநீர் பெற முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.  சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 15 மீட்டர். இதில் நேற்றைய நிலவரப்படி 14.37 மீட்டர் அளவிற்கு நீர் மட்டம் குறைந்து விட்டது. இன்னும் 63 செ.மீ. அளவிற்குதான் நீர் மட்டம் உள்ளது.  தரை மட்டத்திற்கு கீழ் 3 மீட்டர் வரை தண்ணீர் பெற முடியும். ஆனால் தரை மட்ட நீர் குழாயை சில நாட்களுக்கு முன் கேரள நீர் பாசனத்துறையினர் அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணியை நிறுத்த சொல்லி கோவை மாவட்டத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு காட்டினர்.

குழாய் அடைப்பு பணியை நிறுத்துமாறு கோவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் ேகரள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அப்ேபாதும் கேரள அரசு விடாப்பிடியாக தொடர்ந்து பணியை நடத்தியது.  இந்நிலையில், மழை பெய்ததால் பணி சில நாட்கள் பாதிக்கப்பட்டது. மழை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நாட்களாக மிக லேசான மழை மட்டுமே பெய்து வருவதால் நீர் மட்டம் உயரவில்லை. தினமும் 5 முதல் 6 மி.மீ. அளவிற்கு மட்டுமே மழை பெய்கிறது. அணையின் நீர் மட்டம் ‘டெத் ஸ்டோரேஜ்’ என்ற இறுதி கட்ட இருப்புநிலையை கடந்து விட்டது. இன்னும் 63 செ.மீ. அளவிற்கு கீழ் நீர் மட்டம் சென்றால் பழங்கால தடுப்பணையின் தரை மட்ட கீழ் குழாய் மூலமாக மட்டுமே குடிநீர் பெற முடியும்.

இதில் தினமும் 3 கோடி முதல் 3.5 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் பெற வாய்ப்புள்ளது. இதற்கு கேரள அரசு அனுமதி வழங்கவேண்டும். கடந்த 6 ஆண்டிற்கு முன் ‘டெத் ஸ்டோரேஜ்’ அளவிற்கு கீழ் சென்ற குடிநீரை எடுக்க விடாமல் கேரள அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி நீண்ட இழுபறிக்கு பின்னரே குடிநீர் பெற முடிந்தது.  தற்போது தினமும் 4.5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. தினமும் நீர் மட்டம் 10 செ.மீ. வரை குறைந்து வருகிறது.

இதே அளவிற்கு குடிநீர் எடுத்தால் இன்னும் ஒரு வாரம் மட்டுமே சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் பெற முடியும். அதற்கு பிறகு கேரள அரசு அனுமதித்தால் மட்டும் இறுதி இருப்பு குடிநீரை பெற முடியும். வருண பகவான் கருணை காட்டி கனமழை பெய்தால் மட்டுமே அணையின் வறட்சி நிலை மாறும். இல்லாவிட்டால் கோவை மாநகராட்சி மற்றும் 22 வழியோர கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

செக்போஸ்ட் மூடல்: யானைகள் விரட்டல்

கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேற்று சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியை ஆய்வு சென்றனர். சாடிவயல் வனப்பகுதி ரோட்டில் சென்ற அதிகாரிகள் அணையின் எல்லை பகுதி செக்போஸ்ட் வழியாக நுழைய முயன்றனர். கேரள அதிகாரிகள் செக்போஸ்ட்டை மூடி சென்று விட்டனர். வேறு வழியின்றி அதிகாரிகள் வனப்பகுதி ரோட்டில் நடந்து அணைக்கு செல்ல முயன்றனர். திடீரென யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது.

யானைகள் சுற்றி வளைத்துவிட்டால் ஆபத்து ஏற்படும் எனக்கருதி அதிகாரிகள் அங்கேயிருந்து சென்று விட்டனர். பாலக்காடு வழியாக அணைக்கு செல்ல இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் நிலையிருக்கிறது. இதன் காரணமாக அதிகாரிகள் அணைக்கு சென்று நீர் வரத்தை ஆய்வு செய்ய முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: