×

டிக் டாக் செயலிக்கு தடை.! கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி..!!சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு

சீன நிறுவனத்தின் டிக்  டாக், விசாட்,  யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் என இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் சீன செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி தடை விதித்துள்ளது. இந்திய, சீன எல்லையான லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களை சீனா பெறுவதாக எழுந்த  சர்ச்சையை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு தடை செய்வதாக அறிவித்துள்ள செயலிகளில் மிகவும் புகழ்பெற்றது டிக் டாக் செயலிதான். இதை இந்தியாவில் 50 கோடி பேர்  டவுன் லோடு செய்தனர். தமிழகத்தில் மட்டும் 4 கோடி பேர் வரை தங்கள் செல்போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்தினர்.

அந்த அளவுக்கு மேல்தட்டு மக்கள் முதல் பாமர மக்கள் வரை டிக் டாக் மோகத்தில் மூழ்கி கிடக்கும் அவல நிலை இருந்து வந்தது. பள்ளி மாணவர்கள் முதல் இளம் தலைமுறைகள் வரை, முதியவர்கள் முதல் குடும்ப பெண்கள் வரை என பலரும் டிக் டாக் செயலிக்கு  அடிமையாகி வந்தனர். டிக் டாக் செயலியால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்ததையும் காணமுடிந்தது. வாலிபர்கள் பலரை குற்றச் செயல்களுக்கு அழைத்து சென்றது. இதேபோல், பல ஆபாச வீடியோக்களும் இதில் தாராளமாக வலம் வந்தது.  

டிக் டாக் செயலியால் செல்போனில் மூழ்கி கிடக்கும் இளம் தலைமுறைகளை எப்படி மீட்கப் போகிறோம்? என்ற பதற்றம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு அதிரடியாக டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

செல்வி (கோவை): டிக் டாக் ஆப்பை  நானும் பயன்படுத்தி வந்தேன். அது தடை செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்தது. ஆனால்,  மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன். இந்த ஆப் மூலமாக சில திறமைகளை  வெளிப்படுத்தினேன். டைம் பாஸ் ஆனது. உள்ளூர் செயலிகள்  நிறைய உள்ளன. அவை நமக்கு உதவும். சீனாக்காரன் ஆப் வேண்டாம்.

ஹரிஹரன் (ஊட்டி): டிக்  டாக் போன்ற செயலிகள் பலருக்கு பொழுதுபோக்காக இருந்தாலும்  பெரும்பாலானவர்களுக்கு தொல்லையாக உள்ளது. இதுபோன்ற செயல்கள் மூலம் பலர்  தங்களது வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் சந்தித்து வருகின்றனர். எனவே, இது  போன்ற செயலிகளை அரசு முடக்கியது வரவேற்கத்தக்கது.

அ. தமிழ் (அவிநாசி): டிக் டாக்  செயலியால் பல குடும்பங்களில் பிரச்னைகள் உருவாகிறது. திருமணம் முடிந்த பெண்கள்  டிக்  டாக்கில் அதிக நாட்டம் கொள்வதால் குடும்பத்தாருடன்  அதிக விரிசல் ஏற்படுகிறது. குழந்தைகள்  டிக்டாக்கில் அதிக  நேரத்தை செலவிடுவதால், அவர்களது சிந்திக்கும்  ஆற்றல் வெகுவாக  குறைந்துவிடுகிறது. ஒரு சிலர் சமூகம், மதம் போன்றவற்றையும்,  மற்றவர்களையும் கேலி செய்ய, மோசமாக  சித்தரிக்க பயன்படுத்துகிறார்கள்.  இதுபோன்ற ெசயலிகளில் நேரத்தை  வீணடிப்பதற்கு பதிலாக, புத்தகம் படிப்பதற்கு  நேரத்தை செலவிட்டால்  வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தியா (கோவை): டிக் டாக் தடையால் அதனை பயன்படுத்தி அதிக லைக்  மற்றும் விளம்பரங்கள் மூலம் பணத்தை பெற்று வந்த நபர்களும், டிக் டாக்  மூலமாக பிரமலமடைந்தவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டிக் டாக் மூலம்  சிலருக்கு சினிமாத்துறை, குறும்படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.  திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதிக்க நினைத்தவர்களுக்கு டிக் டாக்  செயலிக்கு விதிக்கப்பட்ட தடை பெரும் இழப்பாக உள்ளது.  டிக் டாக் செயலியைபோல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்திய ஆப்களான சிங்காரி,  போரோஸோ ஆப்கள் உள்ளன. டிக்டாக் தடை பெரிய  பாதிப்பை ஏற்படுத்தாது.

சங்கர் கணேஷ் (திருப்பூர்): திறமைகளை வெளிக்கொண்டு வருவதாக நினைத்து, தங்களது திரை மறைவு  காட்சிகளை டிக் டாக் செய்வதால் கலாசார சீரழிவுதான் உண்டாகிறது. இளம் வயது மாணவர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுப்பதோடு, அவர்களின்  படிப்பும் பாழாகிறது. இளம்பெண்கள் மற்றும் திருமணம் ஆன பெண்கள் பெரும்பாலான  நேரங்களில் டிக் டாக் செய்வதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. கள்ளக்காதல், விவாகரத்து  ஆகியவற்றுக்கும் வழிவகுக்கிறது. மொத்தத்தில் இந்த செயலியால் கலாசார சீரழிவுதான் ஏற்படுகிறது. இந்த தடை கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தனிமனித உரிமையில் தலையீடு
சீனிவாசன் (ஈரோடு): எல்லை   அத்துமீறல்  பிரச்னையில் சீனாவுக்கு எத்தனையோ வழிகளில் எதிர்ப்பு    தெரிவிக்கலாம்.  அதையெல்லாம் விட்டுவிட்டு டிக் டாக்   போன்ற மக்களின்  பொழுதுபோக்குக்காக  பயன்படுத்தப்பட்டு வந்த செயலியை தடை   செய்வதால்  ஒன்றும் ஆகப்போவது இல்லை.  மக்களிடம் வரவேற்பு பெற்ற இது போன்ற   செயலிகளை  தடை செய்வது தனிமனித  உரிமையில் தலையிடுவதுபோல உள்ளது.   
மக்கள் தங்களின்  நடிப்பு, பாடல்,  நடனம், நகைச்சுவை என பன்முக திறன் மற்றும்  படைப்பாற்றல்களை டிக்டாக் மூலம்  வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தி    வந்தனர்.

குறிப்பாக பெண்கள்   தங்களது  திறமைகளை வெளிப்படுத்த டிக்டாக்  செயலி பயனுள்ளதாக இருந்தது.   லைக்ஸ், நல்ல  கமெண்ட்ஸ் கிடைக்கும்போது    படைப்புதிறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.  டிக் டாக் என்பது வெறும்   ஆபாசம்  நிறைந்தது என்று ஒற்றை வரியில்  முடித்துக்கொள்ளக்கூடாது.

அசோக் (ஈரோடு): டிக் டாக்  செயலியானது கலாச்சார சீரழிவுக்கு வழிவகுத்து வந்தது. சில பதிவுகள் ஆண்களே கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசங்கள் நிறைந்து   இருக்கும். பாலியல் ரீதியான காட்சிகள் மட்டுமல்லாது   ஜாதி, மதங்களை இழிவுபடுத்தும் பதிவுகளும் அதிகம் இடம் பெற்றிருந்தது.   டிக் டாக் என்பது பொழுதுபோக்கு செயலியாக இருந்த நிலை மாறி முற்றிலும்   கலாசாரம், சமூகத்திற்கு எதிரான ஒரு செயலியாக மாறிவிட்ட நிலையில் மத்திய   அரசு அதை தடை செய்தது வரவேற்கக்கூடியது. இந்த தடையானது  முன்கூட்டியே  செய்திருக்க வேண்டும்.

சினிமாவுக்கு மாறிய ‘ரவுடி பேபி’
டிக்டாக்  செயலி மூலம் ‘ரவுடி பேபி சூர்யா’ என்ற பெயரில் பிரபலமாகி ஆயிரக்கணக்கில்  லைக்குகளை அள்ளிக்கொண்டிருந்த திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசிக்கும்  சுப்புலட்சுமியிடம் டிக் டாக் செயலியை தடை செய்தது குறித்து கேட்டோம். அவர்  கூறியதாவது: டிக் டாக்கில் என்னுடைய ரசிகர்கள் நிறைய பேர் என்  நடிப்பிற்கும், நடனத்திற்கும் லைக்குகளை அள்ளிக்கொடுத்தார்கள். தற்போதைய  தடை டிக்டாக் செயலியில் என்னை பின் தொடர்ந்த ரசிகர்களுக்கு பெரும்  ஏமாற்றம்தான். இருந்தாலும் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒன்றாக  மத்திய அரசு டிக்டாக் செயலியை தடை செய்திருப்பது எனக்கு  மகிழ்ச்சியளிக்கிறது.

இனி நான் சினிமா துறையில் பயணிப்பதா? அல்லது  குடும்பத்தை பார்ப்பதா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன். கடந்த சில  மாதங்களாக படம் ஒன்றில் நடித்து வருகிறேன். கொரோனா காரணமாக அந்த படத்தின்  படப்பிடிப்பு பாதியில் நின்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு  துவங்கி அந்த படம் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மனோஜ் (கேத்தி): டிக்  டாக் மூலம் எனது நடிப்புத் திறமை வெளிக் கொண்டுவர முடிந்தது. நடிகர்கள்  தங்களது திறமைகளை வேஷமிட்ட பின்பு நடித்துக் காட்டுகிறார்கள். ஆனால்,  நாங்கள் எங்களது திறமைகளை டிக் டாக் மூலம் நேரடியாக மக்களிடம் கொண்டு  சென்றோம். ஆனால், தற்போது டிக் டாக் செயலியை அரசு முடக்கியுள்ளது மிகுந்த  மனவருத்தத்தை அளிக்கிறது.

Tags : activists ,Tik , Tik tok Processor, Cultural Degradation, Social Activists, Public
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...