சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; நீதி கிடைக்கும் வகையில் சிபிசிஐடி செயல்படுகிறது...மதுரை உயர்நீதிமன்ற கிளை பாராட்டு...!

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி நடவடிக்கைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வழக்கு;

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொரோனா ஊரடங்கு நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததற்காக கடந்த 19ம் தேதி சாத்தான்குளம் எஸ்ஐ ரகு கணேஷ்,  பாலகிருஷ்ணன் மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட பென்னிக்ஸ் கடந்த 22ம் தேதி இரவும், ஜெயராஜ் 23ம் தேதி அதிகாலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள்  இருவரையும் சாத்தான்குளம் போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சாத்தான்குளம் போலீசார் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

சிபிசிஐடி வசம் வழக்கு:

இதற்கிடையே, மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர், சிபிஐ இந்த வழக்கை ஏற்கும் வரை இடைக்காலமாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இது தொடர்பான ஆவணங்களை  நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் ‘176’ சிஆர்பிசி பிரிவின் கீழ் இரு எப்ஐஆர்கள் பதிவு செய்தனர்.

வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்  ஆகிய இருவரையும் போலீசார் தாக்கியதற்கான முக்கிய தடயங்களும், லத்தியும் ஆவணமாக கிடைத்துள்ள நிலையில், பெண் போலீசின் சாட்சியம், கோவில்பட்டி அரசு மருத்துவரின் காயங்கள் குறித்த பதிவு, உடற்கூறு அறிக்கை ஆகியவற்றின்  அடிப்படையில் சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இந்திய தண்டனைச் சட்டம் 302, 342, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 காவலர்கள் கைது:

இதற்கிடையே, நேற்று இரவு அதிரடியாக எஸ்.ஐ.,ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, இன்று காலை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், ஏட்டுகள் முருகன், முத்துராஜ் ஆகிய 5  பேரை கைது செய்யப்பட்டனர்.  எஸ்.ஐ. ரகுகணேஷ்க்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

உயர்நீதிமன்ற கிளை பாராட்டு:

இந்நிலையில், வழக்கில் சிபிசிஐடி நடவடிக்கைக்கு மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் பாராட்டி தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தந்தை, மகன் குடும்பத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி செயல்படுகிறது. நீதி நிலைநாட்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி அனில்குமார் நடவடிக்கை உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் சிபிசிஐடி செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: