×

என்எல்சி கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தின் 2வது அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் மரணமடைந்துள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.  விபத்தில் மரணமடைந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நெய்வேலி 2வது அனல் மின்நிலையத்தில் எதிர்பாராதவிதமாக கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. இக்கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொண்டு, காயமடைந்தோர் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

தெலங்கானா கவர்னர் தமிழிசை: நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பராமரிப்பு பணிகள் சரியாக செய்யப்படாத காரணத்தினால்தான் கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதற்கு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறேன். .

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நெய்வேலி நிறுவனத்தில் கொதிகலன் வெடித்ததில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அனல்மின் நிலையங்களில் ஏற்படும் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க உடனடியாக தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைத்து ஆய்வு நடத்த மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: என்எல்சியில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். துயரத்தில் வாடுகிற உயிரிழந்த தொழிலாளர்களின குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். நெய்வேலி நிறுவனம் பலியான தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நஷ்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணியும், படுகாயமடைந்தவர்களுக்கு பூரண குணமடையும் வரை உயர் சிகிச்சை அளிப்பதோடு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு அளிக்க வேண்டும். மேலும், இந்த தொடர் விபத்துகள் தொடர்பாக உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களில் மூன்று பெரும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கொதிகலன் சூடேறும் அளவு கண்காணிக்கும் கருவி உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் காலமுறைப்படி பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதத்தாலும் விபத்து நடந்து வருகின்றன. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி, அவர்களது குடும்பங்களில் தலா ஒருவருக்கு நிரந்தர பணி நியமனம் வழங்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் : நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து 6 பேர் இறந்துள்ளனர். 22 பேருக்கு தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 2வது முறையாக இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இதை அனல்மின் நிலைய நிர்வாகம் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தகுந்த நிதியுதவி மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. பலியானோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றரை மாதத்திற்கு முன்பு இதேபோன்ற தொரு விபத்து நிகழ்ந்து 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து நேரிட்டிருக்கிறது. இதன் பிறகாவது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து உயிரிழப்புகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை என்எல்சி மேற்கொள்ள வேண்டும்.

சமக தலைவர் சரத்குமார்: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதும், 17 பேர் படுகாயமுற்றிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 2 மாதங்களில் 2வது முறையாக ஏற்படும் விபத்தாக உள்ளது. சுமார் 3940 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் ஒரு முறை விபத்து ஏற்பட்டும் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யாமல் மீண்டும் விபத்து ஏற்பட காரணமாக இருந்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

Tags : Boiler Explosion ,NLC ,Families ,boiler accident , NLC, Boiler Explosion, Dead Workers, Family, Proper Compensation, Political Party Leaders, Emphasis
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....