பெண்களிடம் நகை பறிப்பு 2 வாலிபர்கள் சிக்கினர்

அம்பத்தூர்: அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் பைக்கில் வந்து செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மேற்கண்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதனையடுத்து, அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் பொற்கொடி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பத்தூர், கொரட்டூர், ராஜமங்களம் ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் 2 வாலிபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் தேடினர். இவ்வாறு 45 கேமராக்களை போலீசார் வந்து ஆய்வு செய்து, செங்குன்றம், மாதனாங்குப்பம், மாணிக்கம் தெருவைச் சேர்ந்த பாலு (21) வில்லிவாக்கம், நியூ ஆவடி ரோடு பகுதியை சேர்ந்த பாபு (20) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகள், 2 பைக்குகள், 60 செல்போன்களை பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: