வைரஸ் ஊடுருவலை தடுக்காது சாதாரண மாஸ்க் டோட்டல் வேஸ்ட்: ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: கொரோனா பரவலால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது தற்போது அத்தி யாவசியமாகி உள்ளது. அதே சமயம் அனைவராலும் மருத்துவ தரத்திலான மாஸ்க்குகளை அணிவது சாத்தியமில்லை. எனவே, வீட்டிலேயே துணி மூலம் மாஸ்க் தைத்து பயன்படுத்தலாம் என பரவலாக அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெருநிறுவனங்கள் மூலம் தெருவோர டெய்லர் கடை வரை விதவிதமான மாஸ்க்குகள் அலங்கரிக்கத் தொடங்கி விட்டன. பெண்கள் புடவை முந்தானையையும், ஆண்களில் பலர் கர்சீப்பையும் மாஸ்க்காக பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை நம்மை வைரசிடம் இருந்து நிச்சயம் காப்பாற்றாது என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.

வீட்டிலேயே மாஸ்க் தயாரிக்க பொருத்தமான துணி வகைகள் குறித்து அமெரிக்காவின் புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில், ‘இருமும் போது வெளியாகும் நீர்த்துளிகளை வெவ்வேறு வகையான மாஸ்க்குகள் எவ்வாறு தடுக்கின்றன என்பதை லேசர் மூலம் ஆய்வு செய்தோம். இதன் மூலம், முகத்தில் இறுக்கமாக பொருந்தாத, கர்சீப் போன்ற ஒற்றை அடுக்கு துணி மாஸ்க்குகளால் வைரஸ் கிருமிகளை தடுக்க முடியாது. இதை அணிவதால் எந்த பயனும் இல்லை. எந்த மாஸ்க்காக இருந்தாலும், அவை சுவாச நோய்க் கிருமிகளிடம் இருந்து நமக்கு 100 சதவீத பாதுகாப்பை வழங்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

* கையும் கழுவணும்

‘மாஸ்க் அணிந்தால் மட்டும் தொற்றிலிருந்து தப்ப முடியாது. சமூக இடைவெளியை பின்பற்றி, அடிக்கடி கைகளையும் கழுவ வேண்டும். நல்ல பருத்தி துணியை கொண்டு 2 அடுக்கு கூம்பு வடிவத்தில் வீட்டில் செய்த மாஸ்க்குகள் மட்டுமே பயனளிக்கும். இது, நீர்த்துளிகளை வெகுவாக குறைக்கின்றன,’ என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: