×

2வது பாதியில் 2வது அலை பல கோடி பேருக்கு வேலை காலியாகும்

வாஷிங்டன்: இந்தாண்டில் 2வது பாதியில் நடக்க உள்ள கொரோனாவின் 2வது தாக்குதல் காரணமாக, உலகளவில்  34 கோடி முழுநேர வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால், உலகமே பாதித்துள்ளது. உலகம் முழுவதும் ஒரு கோடி பேர் பாதித்துள்ளனர். 5 லட்சம் பேர் பலியாகி இருக்கின்றனர். இந்தியா, அமெரிக்கா உட்பட உலகம் முழுவதிலும் பல நாடுகளில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் பல லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளனர். அமெரிக்காவில் கூட 30 லட்சம் பேர் வேலைகளை இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில், 2020ம் ஆண்டின் 2வது பாதியில் கொரோனாவின் 2வது தாக்குதல் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு நிலை உருவானால், உலகளவில் வேலை இழப்புக்கள் அதிகரிக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்த ஆண்டில் மீதமுள்ள நாட்களில் கொரோனா தாக்குதலை தடுப்பது, உலகளவிலான ஊழியர்கள், தொழிலாளரின் வேலை இழப்புகளை தடுப்பது போன்றவை நிச்சயமற்ற ஒன்றாக இருக்கும். இந்தாண்டின் 2வது காலாண்டில் உலகளாவிய வேலை நேரமானது 14 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 40 கோடி முழு நேர வேலை இழப்புக்கு சமமாகும்.

இந்தாண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட வேலை நேர இழப்பை ஏற்கனவே மதிப்பிட்டு இருப்பதை விட, இப்போது மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2020ம் ஆண்டின் இறுதியில் சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய 11.0 சதவீத வேலை இழப்பு நேரமானது, 34 கோடி முழுநேர வேலைகளுக்கு சமமாக இருக்கும். நோய் தொற்றின் 2வது அலையால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டால், மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடுக்ளை கடுமையாக அமல்படுத்த நேரிடும். இதனால், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீளும் வேகம் மேலும் குறையும். இதனால், பல கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள். கடந்த 2வது காலாண்டில் அமெரிக்கா 18.3, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா 13.9 , ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியம் 13.5, அரபு நாடுகள் 13.2 சதவீதம் மற்றும் ஆப்பிரிக்கா 12.1 சதவீத வேலை இழப்புகளை சந்தித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* பெண்களுக்கு அதிக பாதிப்பு
சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது அறிக்கையில், ‘கொரோனா தாக்குதல் காரணமாக ஆண்களை காட்டிலும் பெண் ஊழியர்கள், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொற்றால், வேலை தொடர்பான பாலின ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வேலை செய்யும் பெண்களில் 51 கோடி பேர் அல்லது 40 சதவீதம் பேர், கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் பணி புரிகின்றனர். ஆண்கள் 36.6 சதவீதம் பேர் மட்டுமே பணி புரிகின்றனர்,’ என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : wave ,millions , 2nd half, 2nd wave, multi crores, job vacancy
× RELATED கடல் அலையில் சிக்கி பிளஸ் 2 மாணவன் பலி