பாதுகாப்பு வழிமுறைகளில் அலட்சியம்: அமெரிக்காவில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்க மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் போனால், விரைவில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்று அமெரிக்க கொரோனா தடுப்பு தலைமை மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இங்கு இதுவரை 27 லட்சத்து 27 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய 11.50 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பெரும்பலான மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கி, இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. இருப்பினும் சமூக விலகல், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாகப் பராமரித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றக் கோரி வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் மக்கள் அரசின் அறிவிப்புகளை காற்றில் பறக்கவிடும் வகையில்தான் நாள்தோறும் வலம் வருகிறார்கள். இதனால் மீண்டும் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் நாள்தோறும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு பின்னர் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் பாதிப்பு அதிகரித்து, தற்போது நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் விரைவில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: