ஓய்வூதியதாரர்கள் நடப்பு நிதியாண்டில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க தேவையில்லை: கருவூலத்துறை உத்தரவு

வேலூர்: கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக அரசின் ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை இந்த ஆண்டு சமர்ப்பிக்க தேவையில்லை என்று தமிழக அரசின் கருவூலத்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு மட்டுமின்றி மற்ற மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும், அவர்கள் இறந்திருந்தால் அவரை சார்ந்தவர்களுக்கு குடும்ப ஓய்வூதியமும் கருவூலம் மூலம் வழங்கபடுகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும் ஆண்டுக்கொரு முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை நேரில் கருவூல அலுவலகத்துக்கு நேர்காணலுக்கு வந்து தங்கள் வாழ்நாள் சான்றை வழங்கி உறுதி செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் 31 மாவட்ட கருவூலங்கள், 238 சார் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்களில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை வழங்கி மஸ்டரிங் செய்து கொள்ளலாம். கூடுதல் வசதியாக ஓய்வூதியர்கள் மத்திய அரசின் ‘ஜீவன் பிரமான்’ வலைதளம் மூலம் கருவூலத்திற்கு வராமல் அரசின் இ-சேவா மையம் மூலம் வருடாந்திர நேர்காணலுக்கான வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம். இவ்வாறு சமர்ப்பிக்கப்படாவிட்டால் அவர்களது ஓய்வூதியம் ரத்து செய்யப்படும்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உட்பட நெருக்கடி காரணமாக ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. ஆனால் செப்டம்பருக்கு பிறகும் கொரோனா கட்டுக்குள் வர வாய்ப்பில்லை என்பதாலும், ஓய்வூதியம் பெறுபவர்கள் 90 சதவீதத்தினருக்கும் மேலானவர்கள் வயதானவர்கள், உடல்நல பாதிப்பு கொண்டவர்கள் என்பதாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் அதிகம் என்பதாலும் இந்த 2020-21ம் நிதி ஆண்டில் வாழ்நாள் சான்று வழங்கி மஸ்டரிங் செய்து கொள்வதில் இருந்து விலக்களித்து தமிழக கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் 2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றை வழங்கி இருப்பை உறுதி செய்து கொள்ளலாம் என்று கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: