×

வெளிநாட்டு விமானங்களை தரையிறக்க தமிழகஅரசுதான் அனுமதி தரவில்லை : ஐகோர்ட்டில் மத்திய அரசு குற்றச்சாட்டு

சென்னை : தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து, விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்  சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 1248 விமானங்கள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 661 விமானங்கள் மூலம் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 187 இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து அழைத்துவரப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 17,707 தமிழர்கள் அழைத்துவரப்பட்டுள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாம் கட்டமாக பல்வேறு நாடுகளில் இருந்து 587 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படுவதாகவும், தமிழக அரசு, விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார். மேலும், வெளி நாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் தமிழகத்தை சேர்ந்தவர்கள், ஐதராபாத், பெங்களூருவில் இறங்கி தமிழகம் வருகின்றனர். விமானங்களை தரையிறக்க ஏன் அனுமதி மறுக்கிறது என தமிழக அரசு தான் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 27 ஆயிரம் பேர் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்,  வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் தமிழகத்திற்கு திரும்பியுள்ளனர். விமானங்கள் தரையிறங்க அனுமதியளித்தது குறித்து கூடுதல் விவரங்களை தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை நாளை (இன்று)  தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். அப்போது தமிழக அரசு விமானங்கள் தரையிறங்க அனுமதி தந்தது தொடர்பாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : government ,Tamil Nadu ,Central , Foreigh flights, Landing in chennai airport,Central Government,High Court
× RELATED தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு..!!