கொரோனா காலத்தில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் : முதல்வருக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை : மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கும் மின்கட்டணம் குறைப்பு தொடர்பாக நேற்று அனுப்பியுள்ள கடிதம்: கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் நுகர்வும் அதிகரித்துள்ளது.  ஏழை, எளிய மக்கள் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாமல் வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான காலத்தில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து பொதுமக்களுக்கு தாங்க முடியாத சுமையினை அளித்து வருகிறது. மேலும், மின்சார வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்நுகர்வை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் முறையை மேற்கொண்டுள்ளது. இதனால் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோர் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் மின்நுகர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள மின் கட்டணம் என்பது அரசு அறிவித்த நிவாரணத்தொகை ₹1000ஐ விட பல மடங்கு கூடுதலாக உள்ளது. எனவே, இதை கணக்கில் கொண்டும், மக்கள் அனுபவிக்கும் நெருக்கடிகளை கணக்கில் கொண்டும் தமிழக அரசு மின் கட்டண உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

கொரோனா காலத்திற்கு முன்பு (2020 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம்) மின்நுகர்வோர் எவ்வளவு தொகையை மின்கட்டணமாக செலுத்தியிருந்தார்களோ அதே தொகையைதான் கொரோனா காலம் முடியும் வரை வசூலிக்க வேண்டும். இதுபோன்ற கோாரிக்கைகளை ஏற்று மின் கட்டணத்தை குறைப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: