எதிர்க்கட்சிகளின் நெருக்கடி காரணமாக தான் சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு முதல்வர் மாற்றியுள்ளார்: திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னை அண்ணா நகரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மேற்கு  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், செல்லக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது  மாட்டுவண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்றி நூதன முறையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் ெபட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் திருநாவுக்கரசர் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பொதுமக்களை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்து சென்று அடித்து துன்புறுத்தி மரணம் ஏற்படும் அளவுக்கு செயல்படும், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் சாத்தான்குளம் சம்பவத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் நெருக்கடி காரணமாக தான் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை நடத்தி முடிக்க படுவதற்கு நாட்கள் ஆகலாம் என்பதால் உடனடியாக காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். மேலும் காங்கிரஸ் - திமுக உறவில் விரிசலோ, முரண்பாடோ இல்லை என்றும், இணக்கமான உறவு தான் உள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடந்தது என்று இந்திய ராணுவம் விளக்க வேண்டும் என்று ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. எதிர்க் கட்சியாக இருந்தால் அரசு செய்யும் அனைத்தையுமே எதிர்க்க வேண்டும் என்பது அர்த்தமற்றது.இவ்வாறு திருநாவுக்கரசர் எம்.பி கூறினார். கொரோனா பரவல் காலத்தில் கூட  மத்திய அரசு தொடர்ந்து  பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி வருவதைக் கண்டித்து  சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் திருவல்லிக்கேணி தபால் நிலையம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. இதில் சேப்பாக்கம் பகுதி தலைவர் தணிகாசலம், திருவல்லிக்கேணி பகுதி தலைவர் ஜெ.வாசுதேவன முன்னிலை வகித்தனர்.

Related Stories: